Author: தமிழரசி
ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.
இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்
“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் கடும் மோதல் தொடர்ந்து நீடிக்குமானால், அது ஒரு கிளவுப்பெறும் உலக பொருளாதார அதிர்வலை ஏற்படுத்தும்.
அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்குவோமாயின்,
எண்ணெய் விலை உயர்வு, பங்கு சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை மிக முக்கியமான விளைவுகளாக அமையும்.
எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கு என்பது உலக எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாகும்.
ஈரான் Hormuz என்ற முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது.
யுத்தம் தீவிரமானால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது உலகளாவிய மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.
பங்கு சந்தை மற்றும் நாணயமாற்று வீதம் பாதிப்பு
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்வார்கள்.
மொத்த பங்கு சந்தைகள் கீழோங்க வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் நாணயங்கள் (முதலாவது ஈரான் மற்றும் இஸ்ரேல், பின்பு பிற வளர்ந்து வரும் நாடுகள்) மதிப்பிழக்கும்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைவாசி
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கடல் வழி இறக்குமதி/ஏற்றுமதியில் தாமதம் ஏற்படும்.
இதில் முக்கிய பொருட்கள் (பட்ஜெட் எரிவாயு, உலோகங்கள், வேதியியல் பொருட்கள்) பற்றாக்குறை ஏற்படும்.
இது உலகளாவிய விலைவாசி (Inflation) அதிகரிக்க வழிவகுக்கும்.
உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும்.
விநியோக சுழற்சி பாதிப்பால், குறிப்பிட்ட தொழில்துறைகள் (அறிவியல் தொழில்நுட்பம், மருந்து, வாகனங்கள்) தடைப்படும்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்
பெரும்பான்மையான நாடுகள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தால், பொருளாதார தடைகள் (sanctions) மற்றும் வர்த்தக தடைகள் அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலையில் தள்ளப்படும்.
பயணம் மற்றும் சுற்றுலா
யுத்தம் நிலவரம் நிலவும்போது விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா குறையும்.
இது சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறைக்கு நேரடி பாதிப்பாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாட்டில் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
மீண்டும் ஒரு இந்திய விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க,
மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக
ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.
ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.
இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
உலக அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கும் இந்திய விமானம் வெடித்து சிதறியமைக்கான காரணங்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம்
அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது.
விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.
அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும்.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், “அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன.
அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு.
எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா?
என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர்.
என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.
இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது
சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது
வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக்
கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
எதிர்வருங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்
நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை (11) கைச்சாத்திட்டனர்.
இதுபற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்,
கடந்த பொதுத்தேர்தலின்போது தாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிடவேண்டும்
என அவர்கள் நிபந்தனைகளை விதித்ததாகவும் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், அந்நிபந்தனைகளுக்கு உடன்படிமுடியாது என்பதால் தாம் தனித்து செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு உள்ளுராட்சிமன்றங்களில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக்கட்சியுடன் இணைவது தமக்கு அதிக சந்தோஷத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,
சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
‘வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஜுன் 14 ஆம் திகதி அப்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது’ என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி,
அந்நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாற்றை விக்னேஸ்வரன் மறந்துவிட்டதாகத் தெரிவித்த சித்தார்த்தன், எதிர்வருங்காலத்தில் தமிழரசுக்கட்சியினால்
விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றார்.
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே பிரிட்டன் பிரஜையான விஷ்வாஸ் குமார் ரமேஷ், “நான் எப்படி உயிரோட இருக்கிறேன் எனக்கே தெரியவில்லை” என
விமானம் தரையிறங்கிய சில வினாடிகள் பின்னர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கூறினார் என அவரது சகோதரர் ஸ்கை நியூஸிற்கு தெரிவித்துள்ளார்.
விஷ்வாஸ் குமார் ரமேஷ், வியாழக்கிழமை பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட உடனேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான
ஏர் இந்தியா விமானம் 171-இல் உயிர்தப்பிய ஒரே பயணியாகக் கருதப்படுகிறார்.
விபத்துக்குப் பிறகு விஷ்வாஸுடன் பேச முடிந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அதே விமானத்தில் இருந்திருக்கக் கூடிய அவரது சகோதரருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
லெஸ்டரில் இருந்து பேசும் அவரது சகோதரர் நயன், ஸ்கை நியூஸின் ஷமான் ஃப்ரீமன்-பவலிடம் கூறியதாவது:
விமானம் எயார்வேயில் இருந்தபோது அவர்களது தந்தை விஷ்வாஸுடன் பேசிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
“அப்பா அவரை அழைத்தார்,” என்று 27 வயதான நயன் கூறினார்.
“விஷ்வாஸ், ‘மீண்டும் சீக்கிரமே புறப்பட போகிறோம்’ என்றார்.”
இரு நிமிடங்களுக்குப் பிறகு, விபத்து நிகழ்ந்ததும், விமானம் விழுந்து விட்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ அழைப்பு மூலம் அவர்களது தந்தைக்கு தெரிவித்தார்.
“விமானம் விழுந்தது… எனக்கு என் தம்பி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. வேறு பயணிகள் எவரையும் பார்க்க முடியவில்லை. நான் எப்படி உயிரோட இருக்கிறேன்,
எப்படி விமானத்திலிருந்து வெளியே வந்தேன் எனக்கே தெரியவில்லை” என அவர் கூறியதாக நயன் தெரிவித்தார்.
அகமதாபாத் காவல்துறை அதிகாரி விதி சவுதரி கூறியதாவது, விஷ்வாஸ் 11A என்ற இருக்கையில் இருந்தார்.
அது அவசர வெளிச்செலுத்தும் கதவின் அருகில் இருந்தது. அவர் அந்த கதவின் வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளதாகவும் கூறினார்.
“தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய சத்தம் கேட்டது,” என விஷ்வாஸ் Hindustan Times செய்திதழுக்கு தெரிவித்தார்.
“அது அனைத்தும் நொடிகளில் நடந்தது. என் மார்பிலும், கண்களிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன,” என்றும் கூறினார்.
“நான் எழுந்தபோது, என் சுற்றிலும் சடலங்கள் இருந்தன. நான் பயந்து விட்டேன். எழுந்து ஓடினேன். விமானத்தின் துண்டுகள் எனக்கு எல்லாம் சுற்றிலும் இருந்தன. யாரோ என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.”
Sky News இந்தியா செய்தியாளர் நெவிலே லசரஸ், மருத்துவமனையில் விஷ்வாஸை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஷ்வாஸ், “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நிலையில் இந்திய விமானம் வெடித்துச் சிதறியதில் மூன்று பிரித்தானியர்கள் பலி ஆகியுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகீல் நனபாவா, அவரது மனைவி ஹன்னா, மற்றும் அவர்களது நான்கு வயது மகள் ஸாரா ஆகியோர் விமானத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று
Gloucester Muslim Community அவர்கள் Facebook-இல் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 1.38 மணிக்கு அகமதாபாதிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது. இதில் மொத்தம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 169 பயணிகள், பிரித்தானியாவைச் சேர்ந்த 53 பயணிகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும், 1 கனடா பயணி ஆகியோர் இருந்ததாக ஏர்லைன் தெரிவித்துள்ளது.
Flightradar எனும் விமான தடதள விளக்கதளத்தின் படி, விமானம் புறப்பட்ட பிறகு ஒரு நிமிடத்துக்குள் அதன் சிக்னல் காணாமல் போனது.
அதன் பின்னர் விமானம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில் விழுந்துவிட்டது.
இது தொடர்பில், லண்டன் கேட்விக் விமான நிலையம் கூறியதாவது,
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு பிரிட்டன் நேரப்படி தரையிறங்க வேண்டியது.
பிரிட்டன் வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணிபுரிந்து உண்மைகளை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது” என்று தெரிவித்தது.
முதலில், அகமதாபாத் காவல் ஆணையர் ஒருவர் உயிரிழந்தவர்களில் யாரும் உயிர்தப்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறைந்தது 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து, Boeing 787 Dreamliner என்ற விமான வகையில் இதுவரை நிகழ்ந்த முதல் விபத்து என Aviation Safety Network தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான வகையானது, இரண்டு என்ஜின் கொண்ட விசாலமான பயணிகள் விமானமாகும். 14 வருடங்களாக இந்த Dreamliner மாடல் ஐந்து மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Twitter) தளத்தில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்:
“அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத துக்கமான நிகழ்வாகும். இந்த சோகமான தருணத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கின்றனர்.”
பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு விலைகள் அதிகரிக்கக் கூடுமோ என அச்சம் எழுந்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை எனவும்
விலைகளை அதிகரிக்க வேண்டாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாண் விலை அதிகரிப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதாரச் சம்பவமாகும்.
இது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரச் செலவுகள், மற்றும் மக்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடியது.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், பாண் விலை உயர்வுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
பேக்கரி உற்பத்திக்கான விலைகள் அதிகரிக்கப்படுமாயின்,
சாதாரண குடும்பங்களுக்கு பாண் போன்ற அடிப்படை உணவுப் பொருள்களை வாங்கவே கடினமாகும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மூன்று நேர உணவையும் தவிர்க்கும் நிலை உருவாகும்.
சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களில் நாள் ஒன்றுக்கு கிடைக்கும் வருமானம் உணவுக்கே போதாத அளவில் இருக்கும்.
யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபை முதல்வர் யார்
யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும்.
இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்
முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் எலிக் காய்ச்சல்
நாட்டில் எலிக் காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக
சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் ஒருபக்கம் பரவுவதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுவரும் இந்நிலையில், தற்போது எலிக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட
மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,
“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
முதன் முதலாக டென்மார்க்கில்
முதன் முதலாக டென்மார்க்கில்
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.
டென்மார்க்கின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டி ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது
என்று புள்ளிவிவரங்கள் டென்மார்க்கின் புதிய தரவு செவ்வாயன்று காட்டியது.
அந்த நிறுவனத்தின்படி, நோர்டிக் நாட்டில் இப்போது அதிகாரப்பூர்வமாக 6,001,008 பேர் வசிக்கின்றனர்.
நாங்கள் ஐந்து மில்லியன் மக்களை அடைந்த 1973 ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது ஆறு மில்லியன் மக்கள் டென்மார்க்கில் வாழ்கிறார்கள் என்று
சொல்லப் பழக வேண்டும் என்று புள்ளி விவரங்கள் டென்மார்க் மக்கள்தொகை புள்ளி விவரங்களுக்கான இயக்குனர் ஜோனாஸ் ஷிட்ஸ் ஜூல் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி வரலாற்று ரீதியாக இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதத்தால் இயக்கப்படுகிறது என்றாலும், 1970 களில் இருந்து குடியேற்றம் ஒரு வளர்ந்து வரும் காரணியாக ஜூல் தெரிவித்துள்ளது.
குடியேற்றம் அதிகரித்த காலகட்டத்தில் டென்மார்க்கில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதாவது குடியேற்றம் முன்பை விட மக்கள்தொகை வளர்ச்சியில் அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.
முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.
ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்
மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.
அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.
சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
சீ விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் திடீரென சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதோடு சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும்
ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.
இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,
குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.
செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.
இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.
மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
ஜேர்மனியை சென்றடைந்த அனுர
ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்
உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மின்சார கட்டணம் அதிகரிப்பு
மின்சார கட்டணம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30 – 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூ.8 ஆகும்.
அதன்படி, அந்த பிரிவின் மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.210 ஆக மாறியுள்ளது.
இதற்கிடையில், 61 – 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
91 – 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.360 ஆகும்.
121 – 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.600 ஆகும்.
121 – 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூ.2020 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் ரூ.20 லிருந்து ரூ.2020 ஆகவும் அதிகரித்துள்ளது.
180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும்.
பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 5,000 அப்படியே காணப்படுவதுடன், மாதாந்திர விண்ணப்பக் கட்டணம் மட்டும் ரூ. 100 அதிகரிக்கும்.
அதன்படி, மேற்கண்ட பிரிவில் ரூ.23 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.28 ஆகவும், ரூ.13 ஆக நிலவிய ஒரு அலகின் கட்டணம் ரூ.15 ஆகவும், ரூ.11 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.12 ஆகவும் அதிகரிக்கும்.
அதன்படி, கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் ரூ.9 வரை அதிகரித்து, மாதாந்திர வீத அதிகரிப்பு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் சரக்கு கப்பலில் இருந்த கப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு
ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.
கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,
நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,
சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,
மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















































