Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
குடும்ப வன்முறைகளைத் தீர்ப்பதற்கான புதிய சட்டம்
குடும்ப வன்முறைகளைத் தீர்ப்பதற்கான புதிய சட்டம்
தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கும் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு 04.03.2024 அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததோடு, 03.07.2024 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதோடு, தேசிய மகளிர் ஆணைக்குழு அமைப்பதற்கான நியதிகளும் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் 20.03.2024 பாராளுமன்றத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தது. ஜனாதிபதி அலுவலகம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஒரு வாரத்திற்குள் அந்த அவதானிப்புகளை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, வர்தமானியில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.” என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
8 கோடி ரூபா மோசடி செய்த பெண் சிக்கினார்
8 கோடி ரூபா மோசடி செய்த பெண் சிக்கினார்
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாளிகாவத்தை – லக்விரு செவன வீடமைப்புத் தொகுதியில் மறைந்திருந்த பெண் ஒருவர் அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
ருமேனியாவில் பல துறைகளில் வேலைவாய்ப்பை வழங்கவும் அவர் அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்.
ஆனால், தனக்கு அனுமதிக்கப்படாத பணியிடங்களுக்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேக நபரிடம் பணம் கொடுத்து வேலை கிடைக்காத 88 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வருமாறு விசாரணை அதிகாரிகள் கூறிய போதும், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகாமல் சந்தேகநபர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த முகாமையாளரையும் மற்றுமொருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்
கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்
உலக கடற்புல் தினம் (World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம் நேற்று (02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி, முழங்காவில் மகாவித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூநகரி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினைச் சேர்ந்த 75 சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு, சிறப்புரைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கடற்புற்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு, நாச்சிக்குடா கடலுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறித்த விடயங்கள் செய்முறையாக காண்பிக்கப்பட்டன
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு
பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நேற்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக தெல்லிப்பளை பிரிவு பொலிசார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும் விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும்.
இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாடசாலை மட்ட வெளிப்பாடுகள் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனசாட்சி சுதந்திரத்திற்கு உட்பட்டதாகும்.
இத்தகைய சுதந்திரங்களை மதிக்காத மெல்லிப்பளை பொலிசாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்ற செயற்பாடுகளாகும்.
கல்வி செயற்பாடுகளில் தெள்ளிப்பளை பொலிசாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினை கோரியுள்ளனர்.
இதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்தவாரம் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களில் கவச வாகனங்கள் மற்றும் காந்தள் மலர் போன்ற தோற்றத்தில் அலங்காரம் செய்திருந்ததாக அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலைமையிலே அதிபர் ஆசிரியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தியமை மனித உரிமை மீறல் எனவும் பொலிஸாரின் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை
காதலியுடன் சென்ற மாணவனை காணவில்லை
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியுடன் கடலில் நீராட சென்ற போது கடலலையில் மாணவன் அடித்துச் செல்லப்பட்டதாக காதலி பொலிஸாருக்கு தெரிவித்துள்ள போதும் உறவினர்கள் அது தொடர்பில் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
காலி, வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 17 வயதான சேனுக அன்று மாலையில் காதலியுடன் காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றது பின்னர் தெரியவந்தது.
ஜங்கள் கடற்கரையில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்துள்ள சேனுகவின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அததெரண மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை எவ்வித குற்றவியல் குற்றங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் மத தலைவர் அறிவிப்பு .
சிரியா தாக்குதல் எதிரொலி ,இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

யாழில் வாள்வெட்டு கையை இழந்த குடும்பஸ்தர்
யாழில் வாள்வெட்டு கையை இழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.
30 வயதுடைய செல்வநாயகம் செந்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன் சென்ற குழுவொன்று நபரொருவர் மீது வாளால் வெட்டி கையை துண்டாடியுள்ளனர்.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வித்தியா கொலையாளி திடீர் மரணம்
வித்தியா கொலையாளி திடீர் மரணம்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சிவலோகநாதன் வித்தியா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் தவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அவசர நோய் நிலைமை காரணமாக மார்ச் 31 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பூபாலசிங்கம் 39 வயதுடையவர் எனவும் அவர் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பல்லேகெல தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர் அவ்வப்போது சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையிலும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்..
சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.
சிறுமி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய குழு தீர்ப்பளித்தது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் ஆகியோர் குறித்த தண்டனையை அறிவித்தனர்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா சிறுமி கொல்லப்பட்டதுடன் அது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை வடக்கிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பஸ் கட்டண திருத்தம் இல்லை
பஸ் கட்டண திருத்தம் இல்லை
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனியார் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனை பஸ்கள் பயன்படுத்துவதற்கு முடியும் என்றார்
இரவில் வீட்டுக்கு தீ வைப்பு
இரவில் வீட்டுக்கு தீ வைப்பு
மதுரங்குளி – முக்குதொடுவாவை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும்
பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு, இந்த பிரதேசத்தில் வாழும் இருவரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்த
நிலையில், அப் பிரதேசத்தின் டின் மீன் தொழற்சாலை தொடர்பாக வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே தீ விபத்து இடம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஈஸ்டர் குண்டுதாக்குதல் மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்
ஈஸ்டர் குண்டுதாக்குதல் மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து
விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர்.
2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார்.
ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது
எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார்.
இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார்.
லாஃப்ஸ் எரிவாயு சடுதியாக விலைகுறைப்பு
லாஃப்ஸ் எரிவாயு சடுதியாக விலைகுறைப்பு
லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி நேற்று நள்ளிரவு முதல் அதன் லாஃப்ஸ் உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (எல்பிஜி) விலைகளைக் கணிசமாக குறைத்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தின் கீழ் 12.5 கிலோகிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை ரூ.625 ஆல் குறைக்கப்பட்டு, ரூ.4,115 ஆக விற்கப்படும்.
மற்ற பகுதிகளில் உள்ள விலைகள் மற்றும் அளவுகள் அதற்கேற்ப சரிசெய்யப்படும்.
“இந்த குறிப்பிடத்தக்க விலை திருத்தம் பல சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் சாதகமான பொருளாதார சூழலுக்கு பங்களிக்கும் காரணிகளுக்கு ஒரு சான்றாக வருகிறது” என்று லாஃப்ஸ் கேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, வட்டி விகிதங்கள் குறைப்பு மற்றும் ஏராளமான அந்நியச் செலாவணி கிடைப்பது, கடன் பெற திறப்பதற்கு வசதியாக இருப்பது உள்ளிட்ட அரசாங்கக் கொள்கைகளுக்கு அது ஆதரவாகவுள்ளது.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
மூதூர் – பஹ்ரியா நகர் களப்பிலிருந்து நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் – பஹ்ரியா நகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மணல் மூடையொன்றும் வயிற்றில் கட்டப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அவரது மகன் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது
மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது
வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
பழைய கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பாடசாலை மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.
அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவை இந்த மாணவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல் பூட்டை உடைத்து கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் பெண் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.
குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள் தான். இந்நிலையில் தான் ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவல்களின் முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தற்போது கச்சத்தீவு பிரச்சனையால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் ‛‛கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றிருப்பது தான் காரணம். அண்ணாமலை பெற்றுள்ள தகவலில், ‛‛முன்னாள் பிரதமர் நேரு1961 மே 10ம் தேதி கச்சத்தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டு தயங்கமாட்டேன் என பேசியுள்ளார். கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது.
மேலும் 1973ல் இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” என்ற விபரங்கள் உள்ளன.
இந்த தகவல் தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சாடியுள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சியில் 1976ல். இதை பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகும். அந்த வகையில் தான் தற்போதும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.
இதனால், மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார். சனிக்கிழமை (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான கணவரின் தந்தையின் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.
இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் டிரைவரை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கிருந்த 70 வயது சுகயீமடைந்திருந்த கணவரின் தந்தையான திஸ்ஸ ஹெட்டியாராச்சி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.
கணவன்தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது.
நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி
நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி
கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார் என மெகலேவ பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஆற்றில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.
விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

























