Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் 100% பேர் இன்னும் குணமடையவில்லை என தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் நெடுஞ்சாலைகளில் இடம்பெறுவதாகவும் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தோடு கலந்துரையாடி சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கபடவுள்ளன.
இந்த பணிகளில் 5,580 பொலிஸார், 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால
தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் பயணித்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) காலை 6.45 மணியளவில் நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளனர்.
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் பிற சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை உதவிகளை வழங்குவதை நோக்கமாகக்
கொண்ட ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக படைகள் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காணி உரிமைக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் அமைச்சர் அறிவித்தார்.
கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நமது நாட்டுக்காக இவ்வளவு உதவி செய்தவர்களின் நலனுக்காக நாம் முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது” என்று அமைச்சர் கூறினார்.
கைதிகளைப் பார்வையிட அனுமதி
கைதிகளைப் பார்வையிட அனுமதி
ரமழான் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு சிறைச்சாலைக் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடக பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் 11 ஆம் திகதி ரமழான் பண்டிகையினை முன்னிட்டு இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மாத்திரம் உறவினர்களை பார்வையிடுவதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கைதிகளுக்காக உறவினர்களினால் கொண்டுவரப்படும் இனிப்பு வகை உணவுகள், உணவு மற்றும் சுகாதார பொருட்களை தற்போதுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பாதுகாப்பு
நடைமுறைகளுடன் வழங்குவதற்காக அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேன் கவிழ்ந்ததில் மூவர் காயம்
வேன் கவிழ்ந்ததில் மூவர் காயம்
ஹரகமவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஹங்குந்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூல்கந்துரை பிரதேசத்தில் வைத்து குன்றின் மீது கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சாரதியிடம் வேன் ஓட்டுவதற்குத் தேவையான கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் , வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் படுகாயமடைந்த இரு பெண்களையும் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு”
13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை
நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை
தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, தனது மகன் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தனது மகனுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக தான் கருதுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் கட்சி சரியான நேரத்தில் கலந்துரையாடும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்
கொழும்பு கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளதுடன் அதற்கான மொத்தச் செலவு 5,278,081,272.43 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்
கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், 10 ஆம் மற்றும் 11 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்
ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தற்போது கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.
சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இன்று (08) காலை 10 மணிக்கு அரசியல் குழுவின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் சிரேஷ்ட உபதலைவருக்கு இவ்வாறு அரசியல் பீட கூட்டத்தை அழைப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மஹிந்த லசந்த துமிந்த ஆகியோருக்கான தடை நீடிப்பு
மஹிந்த லசந்த துமிந்த ஆகியோருக்கான தடை நீடிப்பு
அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அந்த அமைச்சர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்று (08) அழைக்கப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை
துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை
இன்று (08) அதிகாலை பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விமானப்படை ரக்பி அணியில் இணைந்திருந்த விமானப்படை கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுக்கை – அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இலங்கை விமானப்படையின் வீரர் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு
சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு
கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது, ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி 800 பேர் பலி
நீரில் மூழ்கி 800 பேர் பலி
நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 – 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்
சிறுவனை தாக்கிய டீச்சர் ரவுடிகளாக மாறும் டீச்சர் வாத்தியார்கள்
சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பாலகனை காட்டுமிரண்டிதனமாக தாக்கிய ஆசிரியை இவர் தானாம். இவர் கைது செய்யப்படும் வரை அதிகம் பகிருங்கள் வவுனியாவில் தாயில்லா பிள்ளையை தலை கால் தெரியாமல் தாக்கிய ஆசிரியை..
வவுனியா சுதந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் – 02 இல் கல்வி கற்கும் தாய் இல்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் சசிக்குமார் சகிலன் என்ற பாலகனை ஆசியை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளார் .
குறித்த மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கொடூர ஆசிரியையை தந்தை தொடர்புகொண்டு பேசிய போது மிகவும் திமிராக பதிலளித்ததுடன் ‘ஆ, ஆ, தெரியாத உங்கள் பிள்ளையை அடிக்காமல் கொஞ்சுவார்களா?” என கேட்டுள்ளார்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் சில மாணவர்கள் கல்வியில் மெல்லக் கற்பவர்களாக இருப்பார்கள் என்று அடிப்படை கூட தெரியாதவர்கள், சிறார்களை எவ்வாறு கையாள்வது என்ற உளவியல் தெரியாதவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.
இவர்களைப் போன்றவர்களை ஆசிரியர்களாக தொடர விடுவது மிகவும் ஆபத்தானது என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியை மீது சரியான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுக்க தவறும் பட்சத்தில் இவ்வாறான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முழு அழுத்தத்தையும் உரியவர்களுக்கு வழங்க என்னைப்போன்ற பலர் தயாராக உள்ளோம்.
எமது பிள்ளைகளை தாக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது? சில அதிபர்கள் இராணுவ தளபதிகள் போலவும் சில ஆசிரியர்கள் இராணுவம் போலவும் நடந்து வருவது அண்மைக்காலமாக தொடர் கதையாகியுள்ளது இனி இவ்வாறானவர்களை புகைப்படத்துடன் வெளியிட்டு எமது பிள்ளைகளை காப்பற்ற வேண்டி வரலாம்..
நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்
நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்
அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
விஜயதாச ராஜபக்ஷவிடம் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெற்ற கனிஷ்ட சட்டத்தரணிகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை அரசியலிலும் சட்டத்துறையிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் விஜயதாச ராஜபக்ஷ, இலக்கியவாதி, எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞராக ஆற்றிய பணிகளுக்காக இதன்போது ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டார்.































