Tag: இலங்கை செய்திகள்
கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து
கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19.07) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து
இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது. பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.
மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை இழுந்து சென்றிருந்தது.
வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு
குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு
குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குமுழமுனை பிரதேசம் என்பது தமிழர்களுடைய வரலாற்றுடன் தொடர்புடைய இடம். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. உடைந்த நிலையில் இருந்தாலும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். யுத்தத்திற்கு பிற்பாடு கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் அவ்விடத்தில் இருந்த ஆதி சிவன் ஐயனார் இனவாத வெறியர்களினால் அகற்றப்பட்டுள்ளது. உடைத்து எறியப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த இடத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ள நிலமையில் கடந்த 14 ஆம் திகதியும் அந்த இடத்தில் பொங்கல் செய்து வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த இடத்திற்கு சென்றிருந்தார்கள். நாங்களும் வழிபாடுகள் செய்ய சென்றிருந்தோம்.
குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு
அப்போது அங்கு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்களும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பொலிசார் பௌத்த பிக்குளுக்கு ஆதரவாகவும், சிங்கள பௌத்த பேரினவாத கும்பலுக்கு சார்பாகவும் செயற்பட்டிருந்தார்களே தவிர, தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு செய்தமைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் நாங்கள் ஆலய பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தடை விதித்தார்கள். அந்த பீடத்திற்கு முன்பாக பொங்கல் செய்வதற்கு அடுப்பினை பற்ற வைத்த போது பொலிசார் தடை விதித்து காலால் உதைந்து அந்த தீபம் அணைக்கப்பட்டது.
அந்த பீடத்திற்கு முன்பாக அமர்ந்து பஜனைகளை செய்ய முற்பட்ட போது பௌத்த பிக்குகள் ஆலய பீடத்தில் ஏறி பிரித்து ஓதும் செயற்பாடுகளை செய்தார்கள். அப்போது எமது மக்களும் அந்த பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தமிழர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது சலசலப்பு நிலமை தோன்றியது.
அதற்கு பிற்பாடு பௌத்த பிக்குகள் அந்த இடத்தில் இருந்து பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தெர்டந்து பொலிசாரினால் பலாட்காரம் பயன்படுத்தப்பட்டு வழிபாடுகளுக்கு வந்த தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டனர். அந்த இடத்தில் பொலிசார் அங்கு நின்ற பெண்கள் சிலரின் மார்பகங்கள் மற்றும் நெஞ்சிவ் தள்ளி கேவலப்படுத்தினார்கள். அதேபோன்று முதியவர்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இல்லாது அனைவரையும் இழுத்து விழுத்தி அவர்களை அச்சுறுத்தி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
நாங்கள் நிலத்தில் இருந்து பஜனை செய்து கொண்டிருந்த போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிற்பாடும் எனது சேட்டில் பிடித்து இரண்டு மூன்று முறை இழுத்து அந்த இடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்தார்கள். முழங்காலால் எனது முதுகில் தள்ளி கீழே விழுத்தினார்கள். கைகளை பிடித்து இழுத்து நிலத்தில் போட்டு மோசமாக அவமானப்படுத்தினார்கள். அதேபேன்று முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், சமூக செயற்பாட்டாள் பீற்றர் இளஞ்செழியன், வேலன்சுவாமிகள் மற்றும் எங்களுடன் வந்திருந்த செயற்பாட்டாளர்கள் தவபாலன் உட்பட பலர் மோசமாக தாக்கப்பட்டர்கள். இது எங்களது வழிபாட்டு உரிமையை மறுக்கின்ற செயல். அடிப்படை உரிமையை மோசமாக மீறுகின்ற செயல். நாங்கள் மிக மோசமாக துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். நீதிமன்றில் இந்த நிகழ்வை தடை செய்ய கோரி பொலிசாரால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தடையுத்தரவு வழங்கப்படாது, நீதிபதி அவர்கள் தெளிவாக வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கியிருந்தாh. அதன் பிற்பாடு கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தான் நேரடியாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள். வன்முறையை துண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
அத்துடன், வேப்பங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 5கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளையும் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
வவுனியா தமிழர் கலாசார பண்பாட்டுடன் தொடர்புடைய ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் இ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா பிரமாண்டு வித்தியாலய மாணவர்கள் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன், ஆடிக்கூழும் வழங்கப்பட்டது.

வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்
இந் நிகழ்வில் மாநகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்
குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வைத்திய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு வாடகைக்கு குடியிருந்தோர் நீதி கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இரவிரவாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று (14.07) இரவு 9.45 முதல் இன்று (15.07) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.
தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்
இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று (14.07) மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.
வாடைக்கு இருந்தோர் வெளியே சென்று வீடு திரும்பி அங்கு சென்ற போது அவர்களை உள் நுழைய தடுத்த இளைஞர் குழு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்யாததுடன், நீதிமன்றுக்கு போகுமாறு அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார். அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளனர்.

அத்து மீறி வீட்டை உடைத்து உள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, அவர்களிடமே வீட்டு சாவியை கொடுப்பது எந்தவகையில் நியாயம் எனத் தெரிவித்தும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கணவன், மனைவி ஆகியோர் இரவு 9.45 இற்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக வீதியோரத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததுடன், விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் தனது வீட்டு சாவியை தரும் வரை செல்ல மாட்டேன் எனக் கூறி அவர்கள் தொடர்ந்தும் போராட்த்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியசகர் குறித்த குடும்பத்தை தமது வளாகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று (15.07) மாலை குறித்த பிரச்சனையை நீதியான முறையில் விசாரணை செய்து தீர்வைப் தருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது வாக்குறுதியையடுத்து குறித்த குடும்பத்தினர் அதிகாலை 1.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சென்றிருந்தனர். குறித்த போராட்டமானது மூன்றரை மணித்தியாலயத்திற்கு மேலாக இரவிரவாக இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, குறித்த காணிக்குரிய ஆலய உடன்படிக்கை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் அருளம்மாவின் மரணத்தின் பின் அவ் ஆவணம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், அவரது மகனின் பராமரிப்பின் கீழே குறித்த வீடு இருந்து வந்துள்ளதுடன் வாடகைக்கு குடியிருந்தோரே அருளம்மாவின் பெயரில் 15 வருடங்களாக ஆலயத்திற்கான நில குத்தகைப் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையிலேயே மீள புதுப்பிக்கப்படாத அருளம்மாவின் பேரில் இருந்த பழைய ஆவணத்தை வைத்து சட்டத்தரணி ஒருவரின் துணையுடன் அவரது மகள் பிறிதொரு நபருக்கு குத்தகை உடன்படிக்கையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (14.07) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் குறித்த பேரூந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.
தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் கைது
இதன் போது ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தில் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவிலில் உள்ள முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடைய நபர் எனவும் தெரிய வந்துள்ளது.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவினையும், சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டி நிகழ்வில் பளுதூக்கல் போட்டியிலே பங்குகொண்ட வவுனியா மாணவி 3ம் இடத்தை பெற்று சாதித்து உள்ளார்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான போட்டியில் சாதித்த தமிழ் மாணவி
2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணத்தில் வவுனியாவிலிருந்து கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி கோசியா திருமேனன் தெரிவாகிய நிலையில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 40 கிலோ எடைப்பிரிவில் 16 வயது மாணவி கோசியா திருமேனன் போட்டியிட்ட நிலையில் 92 கிலோ வரை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.
இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.
ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி
இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி
இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 2332வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் இன்று (11.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும், தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அழைக்கும் எமது தொடர்போராட்டத்தின் 2332வது நாள்.
தமிழ் தாய்மார்களாகிய எமக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு வேண்டும். தமிழர்களின் இறையாண்மை கடந்த காலத்தில் வலிநது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை கண்டறிய உதவும், தற்போதைய தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்தும். எதிர்காலத்தில் அனைத்து காணாமல் ஆக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்தும்.
இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி
13வது திருத்தச் சட்டத்தை முன்வைக்கும் இந்த அரசியல் வாதிகள், இலங்கையில் இந்திய பாணி அரசியலமைப்பை அமுல்படுத்த ஒருபோதும் குரல் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. இதற்குக் காரணம், ஒருவேளை அவர்கள் இந்திய அரசியல்வாதிகளை விடத் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கலாம் அல்லது தமிழர்களாகிய நாம் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கலாம்.
இந்த 13வது திருத்தத்தில் மோசமான எண் 13 உள்ளது. சந்திரனுக்கு அனுப்பிய அப்பல்லோ 13க்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். 13ம் தேதி வெள்ளிக்கிழமையென்றால் நாங்களும் பயப்படுகிறோம். அமெரிக்காவில், பல இடங்களில், அவர்களின் உயரமான கட்டிடங்களில் 13 வது தளம் இல்லை.
கடந்த 36 ஆண்டுகளாக 13வது திருத்தம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நாம் அறிவோம். 1987ல் 13வது திருத்தம் வந்ததில் இருந்து பல வீரத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,46,000 அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார்கள். 90,000 தமிழர்கள் விதவைகள் ஆனார்கள். 35,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். பல தமிழ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கற்பழிக்கப்பட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த 13வது திருத்தம் பற்றிய பேச்சு இன்னும் தமிழர்களுக்கு சேதம் விளைவித்து வருகிறது. தமிழர்களின் கோவில்கள் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.
13வது திருத்தம் கேரள அரசியல்வாதிகளான நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டது. சேர ஆட்சியாளர்களை சோழர்கள் தோற்கடித்ததால் கேரள அரசியல்வாதிகள் தமிழகத்தில் தமிழர்கள் மீது இன்னும் கோபத்தில் உள்ளனர். அதே போல இந்த கேரள அரசியல்வாதிக்கு தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்கள் மீது பைத்தியம். ஏனென்றால் நாமும் தமிழர்கள் என்பதால். 13 தமிழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. எனவே, 13வது திருத்தம் போதும் 13வது திருத்தம் பற்றிய பேச்சும் போதும்.
உலகில் பெரும்பான்மை அடக்கு முறையாளர்களின் கீழ் நில அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட நாடு இல்லை. இந்த 13வது திருத்தம் ஒரு தனித்துவமான கருத்தாகும். இது தமிழர்களை முட்டாளாக்கவே உருவாக்கப்பட்டது.
13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது ஏனெனில் ஒற்றையாட்சியில் சிங்கள பெரும்பான்மையினரால் மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த ஒற்றையாட்சி நாட்டில் சுதந்திரம் பெற்று கடந்த 75 வருடங்களாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.
வெறுமனே, ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அரசியல் தீர்வும் இயங்காது. குறிப்பாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது எந்த அரசியல்வாதியும் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இனி மேலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சிங்களவர்கள் இந்த முழுத் தீவிழும் பௌத்த மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் விரும்புகிறார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை முழு உலகிற்கும் சிங்கள சிந்தனையை காட்டுகிறது.
எனவே, தமிழர்களின் அரசியல், நிலம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தமிழ் இறையாண்மையே சிறந்த தீர்வாகும். அதனால் தான் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாங்கள் கோருகிறோம். எஸ்டோனியா, குரோஷியா, ஸ்லோவேனியா, எரித்திரியா, மாசிடோனியா, கிழக்கு திமோர், மாண்டினீக்ரோ, கொசாவா, தெற்கு சூடான் மற்றும் பல இடங்களில் சுதந்திரம் பெற பொதுவாக்கெடுப்புகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த வாக்கெடுப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனநாயக கருவியாகும். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரும் இந்த தமிழ் அரசியல் வாதிகள் சர்வஜன வாக்கெடுப்பு கேட்பதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
13வது திருத்தம் வேண்டும் என்று மோடிக்கு கடிதத்தில் கையெழுத்திட்ட தமிழர்கள், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்த மோடியிடம் ஏன் கேட்கவில்லை. அரசியல் அதிகாரம் இல்லாத ஒன்றை ஏன் கேட்கிறார்கள்? 13ஐ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் ஒன்றுமில்லை.
இந்த தமிழர்கள் தங்களை இந்திய அரசியல்வாதிகளுக்கு நிகராக பார்க்க விரும்பாததால், தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கும் வகையில் 13வது சட்டத் திருத்தத்திற்கு அழைப்பு விடுப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட சரியான தீர்வு அல்ல. இது ஒரு பாராளுமன்ற அரசாங்க வடிவமாகும். இது ஒற்றையாட்சி அம்சங்களுடன் கூட்டாட்சி கட்டமைப்பாகும். இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் இருப்பதால் இது செயல்படுகிறது. இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினர் அல்ல, 43மூ மட்டுமே. இந்தியாவில் எந்த இனத்திற்கும், மொழிக்கும் பெரும்பான்மை இல்லை. இந்திய ஒற்றையாட்சி நிலைத்திருக்க அதுவே காரணம். தமிழ் அரசியல்வாதிகள் பொதுவாக்கெடுப்பு நடத்த கோரா வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை
தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை
வவுனியா, கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நண்பர்கள் இருவர் நேற்றைய தினம் (09.07) மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை
தாக்குதல் நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்
100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09.07) காலை யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பரீட்சார்த்தமாக பயணத்திருந்தது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.
100 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம்
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் பயணித்திருந்தது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.
குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது. இப் புகையிரதத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.

இதேவேளை, புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை – கொழும்புக்கான புகையிரத சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (09.07) வவுனியா, தோணிக்கல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே குறித்த படங்களுடன் முன்னாள் போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட போராளிகள் நலன்புரி சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகள் அனுககூடிய வகையில் அலுவலகங்களை திறக்கவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்திருந்தார்.

அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களின் படங்களுடன் ஒன்று கூடிய போராளிகள்
இதன்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தியாகதீபம் திலீபன் மற்றும் அனைபூபதி ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிகுமரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜீலை 20 ஆம் திகதி புதுடில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன் போது ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியா வெளிவிவகார அமைச்சர் அவரசமாக இலங்கை வருவதற்கான காரணம் வெளியாகியது!
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
தமிழர் பகுதி தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொண்டதால் அதிர்ச்சியில் மக்கள்
தமிழர் பகுதி தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொண்டதால் அதிர்ச்சியில் மக்கள்
வவுனியாவில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தை தனது வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நபர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் நாய்க்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
தமிழர் பகுதி தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொண்டதால் அதிர்ச்சியில் மக்கள்
விலங்களுக்கு என தனியான வைத்தியர்கள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையம் உள்ள போதும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் மருத்து நிலையம் ஒன்று இவ்வாறு நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் எழுத்து மூலம் பதில் வழங்கிய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், குறித்த முறைப்பாடு தொடர்பாக எமது பணிமனையினால் ஆய்வு கூட உரிமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரினால் எமக்கு பதில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் அக் கடிதத்தில் தான் இனிமேல் அத்தகைய தவறை புரியமாட்டேன் என மன்னிப்பும் கோரியுள்ளார் என தங்களுக்கு அறியத் தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கிய எழுத்து மூல பதிலில்,
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு கூட உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதுடன், தவறு இனிவரும் காலங்களில் இடம்பெறாது என கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றேன் என முறைப்பாட்டாளருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமையகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமையகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (05.07.2023) காலை இரண்டு பிள்ளைகளின் தயார் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச் சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமையகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்
இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி கூட்டுப்படை இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரகர்த்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி கூட்டுப்படை தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்
குறித்த பெண்ணிக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
தமிழர் பகுதியான வவுனியா, ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி அவர்களின் தலமையில் நீதிமன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் விபச்சாரத்திற்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்களும் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.
தமிழர் பகுதியில் விடுதி முற்றுகையின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது
கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பின்னணியில் இயங்குகின்றமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக அனுப்பட்ட யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்குத் திரும்புகிறது. குறித்த யானையை சரியாக பராமரிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே தாய்லாந்து அதனை மீள தருமாறு கோரியிருந்தது.

4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானை இன்று காலை கொழும்பிலிருந்து வர்த்தக விமானம் மூலம் தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசேட விமானம் மூலம் 7 லட்சம் டொலர் செலவில் தாய்லாந்து சென்ற முத்து ராஜா
‘முத்து ராஜா’வை ஏற்றிய விமானம் இன்று காலை 7.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) என்ற பெயரைக் கைப்பற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கின்றது. அந்தப் பெயரை கூட்டனி பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
புளொட் அமைப்பைச் சேர்ந்தவரான ஆர்.ராகவன் என்பவரை செயலாளராக கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை தமது புதிய கூட்டாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆக்கிக் கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தாமாகவே வெளியேறி விட்டதாக கூறி ரெலோ மற்றும் புளொட் ஆகியன மற்றைய மூன்று கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறி வந்தன. அதேநேரம் அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனி என்ற பதிவு செய்யப்பட்ட கூட்டு அணியில் இணைந்து கொண்டன.
ஆங்கிலத்தில் டிரிஎன்ஏ என்று வரக் கூடிய இந்தக் கூட்டணியின் ஆங்கிலப் பெயரில் உள்ள டி என்ற எழுத்தை சிறிதாக்கி விட்டு ரிஎன்ஏ என்ற மீதியை பெரிதாக்கி தாம் ரிஎன்ஏ என மக்களுக்கு கூறி வந்தது.
இந்த நிலையில் தமது கூட்டனிப் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டனி என்ற பெயரிற்கான ஆங்கிலப்பதமான ரிஎன்ஏ என்பதை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்திருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்த தடை
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆங்கிலத்தில் ரிஎன்ஏ என்றே பயன்படுத்தி வந்தது. தமது கூட்டனிக்கு அந்த ஆங்கிலப் பெயரை பதிவு பெயராக எடுத்துக் கொண்டால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக கூட்டனியின் இந்த விண்ணப்பம் க்டந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதேபெயரில் வேறு கட்சி நீண்டகாலமதாக இயங்கி வருவதால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெரையோ அல்லது ரிஎன்ஏ என்ற பெயரையோ பயன்படுத்த முடியாது.

























