நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

நாங்கள் மலர்ந்துவிட்டோம்
Spread the love

நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

மலர்களே❗
சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
நாங்கள் மலர்ந்துவிட்டோம்.
கார்த்திகை மாத
காவிய தேவருக்காய் மலர்ந்துவிட்டோம்.
வான்மழை பெய்யும்
கானகம் எங்கும் கலந்துவிட்டோம்.

மங்கையரே❗
எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.
வாசம் வீசும் உங்கள் கூந்தல்களில்
வந்து குடிகொள்ளப் போவதில்லை.
தேசம்மீட்க உயிர்துறந்த
தெய்வங்களை துயிலெழுப்ப போகிறோம்.

சாமிகளே❗
கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்.
பக்தர்கள் பூத்தட்டுகளில்
காத்திருக்கப் போவதில்லை.
உத்தம வேள்வியில் நீராடியவர்களின்
உடல்களைத் தழுவப்போகிறோம்.

தேனீக்களே❗
உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மலரவில்லை.
மாவீரரின் விடுதலை
வேட்கைக்காகவே மலர்ந்துள்ளோம்.

மகிழ்ச்சிக்காக மலரவில்லை.
இனத்தின் எழிச்சிக்காக மலர்ந்துள்ளோம்.
ஆசைக்காக மலரவில்லை.
புனிதர் நாளின்
பூசைக்காக மலர்ந்துள்ளோம்.

காய்ந்து விழும்
காலத்துக்காக மலரவில்லை.
கல்லறையில் விழும் கண்ணீரை ஏந்துவதற்காக மலர்ந்துள்ளோம்❗

-பிறேமா(எழில்)-