நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
எண்ணம் கசக்கி எண்ணிய தெண்ணு
ஏற்றம் வாழ்வில் பிறக்கும் …
கண்ணில் கரைந்த கண்ணீர் துளியும்
கடுகதி நன்றே மறையும் …
கூடி நின்றார் குரல்வளை அறுத்து
குருதி குடிக்க துடிப்பார் – நீ
வீழ்ந்தாய் என்ற விலாசம் இட்டு
விசிலடித்து அலைவார் ….
பழகும் போதே பாம்பென அறியா
பழகி நீயும் உழல்வாய் ……
பார்த்த கணக்கு கை நொடி கூட
படு குழியில் வீழ்த்தி போவார் …
ஏறி நடந்தால் ஏறி வந்து
ஏசியாகி உரைப்பார் – தாம்
பேசி நின்ற வார்த்தை மறந்து
பெரியாராய் உன்னை மொழிவார் …..
சாவை தழுவ நோதல் வீசும்
சக பாடிகள் எனக்கு வேண்டாம் ….
ஆறாம் அறிவை தட்டி பேசும்
அறிவகம் ஒன்றே போதும் …..!
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்