Tag: வெடுக்குநாறி
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை நேற்று (19) செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆவயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்ட போது, நேற்று (19) வரை பொலிஸாரின் கோரிக்கைகு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருள்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.
பொலிசாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து, எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி, தொல்பொருட்கள்கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்ற போது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு சீயினை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது. அந்நிலையில் அறிவு சார் நீதவான் அவர்கள் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிசார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.
நேற்று வரை சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் நேற்று குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.
இந்த அடிப்படையில் சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.
பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றத்ப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட நேற்று தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம். இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிசாரிடம் கேட்டிருந்தது. இறுதியில் விபரமான தீர்ப்பிளை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 சீயின் கீழ் பொலிசார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேக நபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் பொலிஸாரினால் 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்
இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைக்காலமாக ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
அந்த அமைப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக இன்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.
இந்து பௌத்த சங்கம் என்ற பெயரில் அண்மைகாலமாக ஆலயங்களின் திருவிழாக்களில் நிர்வாகத்தினரின் அனுமதியின்றி ஆலயங்களில் பதாதை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
இந்து பௌத்த சங்கம் என்று இயங்கும் அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பின்புலமாக கொண்ட அமைப்பு. குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருந்த தாகசாந்தி நிலையத்தில் கூட இந்த அமைப்பு தனது பதாதையை போட்டிருந்தது.
இதை நான் அவதானித்து எனது முகப்புத்தகத்தில் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக பொது மக்களுக்கான பொது பிரச்சனை என்ற அடிப்படையில் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு அமைய முகப்புத்தகத்தில் இந்த இந்து பௌத்த சங்கம் என்கின்ற அமைப்பு
தேவையற்ற வகையில் தமிழர்களுடைய சைவ ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவது பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்காகவும், தேவையற்ற வகையில் மதங்களுக்கு இடையில் பிரச்சனையை ஏற்படுத்தவும் என்ற அடிப்படையில் பதிவேற்றியிருந்தேன்.
அதற்காக இந்த அமைப்பு சார்ந்து இயங்கும் சில நபர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்து விசாரிக்கப்பட்டது.
அதற்கான வாக்குமூலம் பெறப்பட்டது. உண்மையில் இந்த அமைப்பு அண்மைக்காலமாக கணிசமான ஆலயங்களில் இந்த பதாதைகளை தொங்க விடுவதை காண்கின்றோம்.
முற்று முழுதாக தமிழர் தாயகத்தில் ஒரு பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்காக திட்டமிட்டு இயங்கும் அமைப்பாக குற்றம் சாட்டுகின்றோம்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம்.
அந்த அடிப்படையில் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பௌத்தமயமாக்கலை செய்வது தான்.
அதனை நியாயமான முறையில் பதிவேற்றியிருந்தேன். உண்மையில் நாங்கள் பௌத்த மத்திற்கோ, அதன் இனத்திற்கோ எதிரானவர்கள் இல்லை.
பௌத்தம் போதிக்கும் சிந்தனைகளை சிங்களவர் பின்பற்றி இருந்தாலே தமிழர் தாயகத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாது என்பது எங்களுடைய கருத்து.
வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு
தேவையற்ற விதத்தில் சைவ ஆலயத்தில் பௌத்த மதத்தை சேர்க்க வேண்டிய தேவை என்ன..? சைவ ஆலயங்களில் சரியான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
இங்கு ஏன் இந்த அமைப்பு? எதற்கு வந்து தாகசர்ந்தி, சாப்பாடு வழங்குவதாக செயற்படுவது. திட்டமிட்டு பௌத்தமயமாக்கலுக்கும், விகாரைகளை கட்டுவதற்குமான செயற்பாடுகளை நகர்த்துவதற்கே.
இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியை பின்புலமாக கொண்டு மிக விரைவாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தான் இது தீவிரமாக நடைபெறுகிறது. பௌத்தமயமாக்கலை செய்வதற்காகவும் மத நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த அமைப்பு செயற்படுகிறது. பொலிசாரின் வாக்குமூலத்திலும் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
வவுனியா, குருமன்காடு சித்தி விநாயகர் ஆலயத்தின் தாகசாந்தி நிலையத்தில் இந்த அமைப்பின் பதாதை அனுமதி பெறாது தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தின் உப செயலாளர் அதனை அகற்றியிருந்தார்.
அவர் பொலிசாரின் துணையுடன் மிரட்டப்பட்டு ஆலயநிர்வாக அனுமதி இல்லாமல் மீளவும் பதாதைகளை கட்டியுள்ளார்கள். நந்திக் கொடிகள் காணப்பட்ட இடத்தில் வீதிக்குரிய இடம் எனக் கூறி அப் பதாதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
வவுனியாவில் வெடிவைத்தகல்லை ஆக்கிரமித்து கச்சல்சமனங்குளம் என்ற பெயரில் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணியில் அடாத்தாக விகாரை கட்டப்பட்டுள்ளது.
குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் பௌத்த வல்வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பௌத்தமயமாக்கலை செய்ய இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வவுனியாவில் பல நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான அமைப்பின் ஊடக ஐக்கிய தேசிய கட்சி பௌத்த மயமாக்கலை செய்ய முயல்கிறது. இதனை அனுமதிக்க மாட்டாம். அனுமதிக்கவும் முடியாது. நான் போட்ட பதிவு தொடர்பில் சவாலுக்கு உட்படுத்துகின்றோம்.
முடியுமானால் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விடயத்தை கையாளுங்கள். அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
பௌத்தமயமாக்கலுக்கு நாம் ஒரு போதும் துணை போக மாட்டோம் என்பதை பொறுப்பான இயக்கம் என்ற அடிப்படையில் பதிவு செய்கின்றேன் எனத் தெரிவித்தார்.















