Tag: நிலா தமிழ்
மேஜர் திலகா / வான்மதி
மேஜர் திலகா /வான்மதி
மேஜர் திலகா /வான்மதி , வீர மண்ணின் நாயகியின் நினைவு நாள் இன்றாகும் .மேஜர் திலகா / வான்மதி
வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை
முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார்.
நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும்.
அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான்.
திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம்.
முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1
சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சி
987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர்.
இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார்.
சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார்.
குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார்.
1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள்.
பெண் போராளிகள்
உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.
ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர்.
அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார்.
1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார்.
கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர்.
தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை
1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார்.
ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார்.
கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார்.
பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்” என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார்.
ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார்.
பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார்.
மனதளவில் அன்பாகப் பழகுவார்
ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”.
களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.
அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.
மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர்.
(ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்)
யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன.
சளைக்காத திலகா அக்கா
எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான்.
எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும்.
வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின்
வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது.
சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர்.
1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது
கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார்.
கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி
கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார்.
நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது.
தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார்.
இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார்.
தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார்.
ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்கா
ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர்.
ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர்.
விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை.
போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும்.
“எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள்.
1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள்.
திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார்.
பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்.
திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம்
திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.
வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார்.
அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார்.
ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.
அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார்.
அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது.
ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது.
இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்.
அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது.
காப்பரணுக்கு துணையாக தாக்குதல்
ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார்.
எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான்.
திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது.
நெஞ்சுரம் நிமிர்ந்த தோற்றம்
அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார்.
தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர்.
ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள்.
“போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார்.
திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது.
நெஞ்சிலும குண்டு
உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது.
எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார்.
தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம்.
-நிலா தமிழ்.
(இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)
- ஈழச்சுடர்கள்

- மேஜர் திலகா / வான்மதி

- கப்டன் கலைமதி

- எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

- லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

- மெழுகுவர்த்திகள்

- மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

- தாயுமானவள்

- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

- தமிழேந்தியப்பா

- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

- அண்ணா

- கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

- மாவீரர்

- நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் அகல்யா

கப்டன் கலைமதி
கப்டன் கலைமதி
கப்டன் கலைமதி ,அது 1995 காலப்பகுதி. வெள்ளை மேற்சட்டையும் (shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர்
வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம். எப்பொழுதும் எதற்கும் அணித்தமாக இருப்பது போல் அவருடைய எறும்பு
போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது.
கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற்பெயருடன் அக்காமார், அண்ணன்,
தங்கை, தம்பிகள் கொண்ட இயல்பான குடும்பத்தில் பிறந்தவர் தான். தந்தை ஒரு புகைப்படக்கலைஞராக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றை
நடத்திவந்தார். மற்றவர்கள் போலவே கல்வி, வாழ்க்கை என்று அவரின் வாழ்வும் நகர்ந்தது. கணக்கியல் உயர் தேசிய கல்வியையும் (HNDA) நிறைவுசெய்து, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
காலத்தின் தேவைகருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர், புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.
பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு காலில் சுழிவு ஏற்பட்டது. அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் எலும்பு முறிந்து விட்டது. அதனால் மிகுந்த இடர்ப்பட்டதுடன் துன்பத்தையும் அனுபவித்தார்.
அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.
அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது. அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் (first in commerce) அங்கிருந்தே தொடர்ந்தார்.
நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.
அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.
வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம், புடவை வாணிபம், கோல்சர் வாணிபம், தையல் தொழிலகம், அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார்.
1995 ஐப்பசி மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை வன்கவர்வதற்காக வான் தாக்குதல்கள்,
எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதானல் அங்கிருந்து வெளியேறி, சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுப் பணிகள்
தொடர்ந்தன. மீண்டும் தரை வழியாகவும் வான் வழியாகவும்bகரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக சிறிலங்கா இராணுவத்தினர் எமது ஊர்களை வன்கவர்ந்த வண்ணமிருந்தனர்.
1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்றபோதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.
ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நீண்ட தொலைவுக்குச் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டன.
அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.
கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு
அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.
இருந்தபோதும், ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும். அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தேனும் ஓட்டத்தினை நிறைவுசெய்வார்.
இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் செல்லுமாறு பணித்தாலும் போக மாட்டேன் எனக் கூறி பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.
தனக்குக் கிடைத்த களமுனைக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட அவர் விரும்பவில்லை. சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது
அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை (டாசர்) கீழே பிடித்துக்கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால் சட்டியை (டாசர்)
தலையில் சுமந்துகொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார். ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது.
மீண்டும் களமுனையிலிருந்து முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார். சிலவேளைகளில் நாங்கள் முகாமில் உணவு சமைத்தும் உண்பதுண்டு.
அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால்
அப்போது கலைமதி அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார். ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார். அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக்
கூறுவார். ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சம் புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான். அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான்.
அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள். ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.
சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக்கொள்ள மாட்டார். கண்டிப்பாகவும் அதேநேரத்தில் உறவோடும் பழகக்கூடியவர்.
எனவே அவருக்கென்று ஒரு தனிமரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது. நீண்டகாலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார். வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார்.
இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை. “திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.
இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.
“இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது” என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர். இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார். ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார்.
வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திரபுரத்தில் தான் இருந்தது. கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.
அதிகாலை புலர்ந்தது. அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.
தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்ல அணியமாகுமாறு கூறிவிட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது. கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.
ஆனால் அவருக்கு அது தெரியவில்லை.
1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் சுதந்திரபுரத்தில் அந்தத் துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தது. திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான், தரை மற்றும்கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தியது.
அதில் பெருமளவு மக்கள் (33 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைய, பலர் கொல்லப்பட்டனர்.
யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று. அந்தக் கோர நிகழ்வில் எமது கலைமதி அக்காவும் (கப்டன் கலைமதி) அம்மா அண்ணாவும் (லெப்.கேணல் அன்பு/அம்மா) வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
“புடவை வாணிபம் இல்லாவிடில் தான் இல்லை” எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார்.
–நிலா தமிழ்
(இந் நினைவுப் பகிர்வுக்குத் தகவல் குறிப்புகள் வழங்கியவர்- விண்ணிலா)
- ஈழச்சுடர்கள்

- மேஜர் திலகா / வான்மதி

- கப்டன் கலைமதி

- எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

- லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

- மெழுகுவர்த்திகள்

- மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

- தாயுமானவள்

- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே

- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்

- தமிழேந்தியப்பா

- கரும்புலி மறவர்களுக்கு காணிக்கை

- ஈழத்தின் இறையாண்மை காத்தோர்கள்

- ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

- அண்ணா

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
லெப்ரினன்ட் புகழினி 24 ஆவது ஆண்டு நினைவு
லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,வீரவணக்கங்கள் பேணி(புகழினி)என்றும் உன் நினைவுகளுடன்
லெப்ரினன்ட் புகழினி
யார் இந்த புகழினி
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லுத் தெரியச் சிரிக்கும் கள்ளமில்லா வெண்சிரிப்பும் கல கல என்று எந்த நேரமும் வாயோயாமல் அலட்டும் வெகுளித்தனமான பேச்சும்.
கட்டைக் காலை வைத்துக்கொண்டு பாதத்தால் ஈருளியின் மிதிகட்டையை தொடமுடியாமல் அவதிப்பட்டு தெண்டித் தெண்டி ஈருருளி ஓட்டும் அழகு தான்.
அவளிடம் அணியும் ஆடை, செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,
எந்த நேரமும் “அயர்ன் ” பண்ணி (ironing) மடிப்புக் கலையாத ஆடைதான் அணிவாள்.
எந்த வேலையென்றாலும் நாளைக்கு செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.
எங்களின் நாவற் பழ நிறத்தழகி அவள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அவள் சராசரி உயரத்தை விட சற்று குறைவான குள்ளமான உருவத்தை உடையவள். இதனால் அவள் பல சிரமங்கள் சந்திக்க வேண்டி இருந்தது.
இவளது அழகிய சிறிய குடும்பம்
எடுத்துக்காட்டாக,சைக்கிள் ஓட்டுவதற்கு கூட எதாவது ஒரு உயரமான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.
இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள்
எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.
அம்மா, அப்பா, தம்பி, அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது. அவளது சொந்தப்பெயர் மேரி கொன்ஸ்ரலின். வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.
அவளது சொந்த இடம் யாழ்,வலிகாமப்பகுதியில் சில்லாலை என்ற கிராமம். அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.
வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதான் காரணத்தால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தி
1994 ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாள்.
1995 ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்சநிலையை அடைந்திருந்தது.
வலிகாமப்பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை வன்கவர முன்னேறி வந்துகொண்டிருந்த போது எமது போராட்டத்தின்உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.
அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக்கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்…
இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்…
லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்” என்று 1995 ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.
அங்கு அவள் மகளிரணியின் 30 வது பயிற்சிப் பாசறையில் புகழினி பெயருடன் போராளியாகப் புடம் போடப்பட்டாள்.
பின்பு 1995ம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.
கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம்
புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து,பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற்கொண்டாள்.
அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதே வேளை தேவைப்படும்போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.
அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக்கொண்டாள்.
தற்காப்புக் கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி
தற்காப்புக்கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றாள். அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம் (break dance) ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.
எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் (முறிப்பு ) நடனமாடி அவள்தான் கதாநாயகியாக திகழ்வாள்.
மேலும் அவள்
வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.
இயக்கத்துக்கு வரும் போது
இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு ஈருருளி கூட ஓட்டத்தெரியாது. ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக்கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது.
1996 ம் ஆண்டு ஆரம்பகாலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது .
பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.
அவளது நினைவாக
அதில் சிலவற்றை அவளது நினைவாகப் பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன்.
1996 ம் ஆண்டு வன்னிக்கு வன்னிக்கு வந்த புதிதில் எங்களுக்கு பணிக்கு செல்வதற்கு ஈருருளி கூட இல்லை.நானும் புகழினியும் ஈருருளி இல்லாத காரணத்தினால் நடராசாவில் (நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.
எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழமை.
புகழினிக்கு (பேணி) தான் பட்டப்பெயர். (எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப்பெயர் உருவானது) என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.
லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
பின்பு பணிக்கு செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு ஈருருளி என்று கொடுக்கப்பட்டது.
அதில் நானும் பேணியும் (புகழினி) தான் ஒன்றாகப் பணிக்குச் செல்வோம். வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் மருத்துவ மனைக்குச் செல்வேன்.
மதிய நேர உணவு இடைவேளை
நாங்கள் பணிமுடித்துவிட்டு மதிய நேர உணவு இடைவேளைக்கு முகாமில் சென்று தான் சாப்பிடுவோம்.
அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவுற சோம்பலில் நானும் புகழினியும் ஒரு தட்டில் தான் உணவு உண்போம்.
சாப்பிட்ட தட்டைக் கழுவோனும் என்ற கள்ளத்தில் நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளிவிட்டு ஓடி விடுவேன்.
அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப்போட்டு வருவாள்.
அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலேயே எனக்கு பெரியதொரு மகிழ்வு இருக்கும் .
1997 ம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகமை கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப்பட்டோம்.
எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள். அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச மனப்பாங்கும், இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள்.
அதனாலேயே அவளை எந்த நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுதுபோக்கு.
பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை
உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.
எங்கள் முகாம் முற்றத்தில் பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.
அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தொலைவு வரைக்கும் என்ன நடந்தாலும் பார்க்க முடியும்.
அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து படிக்கிறம் என்று கதைவிட்டு மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து விடுப்பு பார்த்துக்கொண்டு படிப்பதுண்டு.
புகழினிக்கு மாமரத்திலேயே எங்களோடு சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க விருப்பம்… ஆனால் ஏறத்தெரியாது.
அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளிவிட்டு ஒரு மாதிரி ஏற்றிப்போடுவோம்.
மேலே இருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில் இருக்கிற மாம்பிஞ்சுகளால வீதியால் உந்துருளியில் பயணிக்கின்ற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.
அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று வீட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.
ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்குப் பார்த்து எறியத் தெரியாது. இப்படித் தான் ஒரு தடவை அவள் ஒரு உந்துருளிக்கு மாம்பிஞ்சால ஏறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால ஈருருளியில் வந்த அப்பு மேல பட்டு
அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால ஏறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நாலுபேரும் நூறு தோப்புக்கரணம் போட்டதை இப்பவும் மறக்கமுடியாது.
கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்
புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம். நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.
எங்களது முகாமிலிருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும்போது சாப்பிடுவதற்கு நிறைய உலருணவுப் பொருட்கள் கொண்டுவந்து தருவதுண்டு.
அதை தமா அன்ரா தான் (ஒரு அக்காவின் பட்டப்பெயர்தான் தமா அன்ரா) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்.
அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.
அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது. மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.
தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.
புகழினியை இதுக்குக் கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்,
சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது
சாப்பிட்டால் பிறகு தமா அன்ரா விடம் பேச்சு/கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு (எங்களுக்கு எவ்வளவு பேச்சு/ கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது)
எங்களது முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரங்கள் உண்டு.
அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில்தான் இருக்கிறவர்.
அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழங்கள் காய்ந்திருக்கிறது என்று கண்காணிச்சுக்கொண்டு தான் இருப்பார்.
பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்
எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும். ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவி விட்டு அந்தப் பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சுவைப்பது உண்டு.
இந்தப் பலாப்பழம் பறிக்கின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட நேரக் காவற்கடமை நேரத்தில் தான் நிகழும்.
மற்றக் குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில் இருக்கிற விருப்பத்தில் இதுக்கு மட்டும் எங்களோடு கூட்டுச் சேருவாள்.
பலாப்பழம் ஏறிப் பறிக்கவோ வெட்டவோ வரமாட்டாள். நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுச் களவாணிகளை (முகாமில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்தப் நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…
பல விசுவாசக் குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற பயம்) உறக்கத்தில் இருந்து எழுப்பிக் கூட்டிக் வந்து அவர்களுக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.
இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டுப் பலாச் சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால் பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தகார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து
பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை
அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பின கதையை இப்பவும் எங்களால மறக்க முடியாது.
(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விடயங்களில் எங்களுக்குத் தண்டனை தருவதில்லை) இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.
அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது
சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.
வன்னி இடம் பெயர்வு
பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவுக்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குத் கூட அவதிப்பட்டார்கள்.
புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததால் அவளது பிரிவினையைத் தாங்க முடியாமல் கவலைப்பட்டு இருதய நோய் மற்றும் சுவாச நோய் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றார்.
அப்பா தான் ஓலைப்பாய், பெட்டி இழைத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். புகழினியின் தம்பியோ மிகவும் இளையவன்.
அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தான். இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்கு செல்லும்போது புகலினியின் அம்மா “என்ர மகள் வீட்ட இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களின் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.
ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு தேவை தானே. உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே” என்று சொல்லிச் சிரித்துச் சமாளித்து விடுவாள்.
புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.
இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.
எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக (album) சேகரித்து வைத்து இருந்தாள்.
சில போராளிகள் வீட்டில் “அம்மாவாணை” என்று சத்தியம் செய்வது போல இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.
அது புகழினிக்குப் பிடிக்காது. சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதீங்கோ என்பாள்.
எங்களின் பொறுப்பாளார் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவளைப் போர்க்களங்களுக்கு அனுப்புவதில்லை.
1999 ம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப்பகுதிக்கு போர்க்களத்துக்கு சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்க வில்லை.
ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து பொறுப்பாளரோடு சண்டை பிடித்து சண்டைக்களத்துக்கு சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினாள்.
பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக விழுப்புண்ணடைந்து மாற்றுத்திறனாளிகளானோர்
நிருவாக நடவடிக்கை
மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்கு மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.
எங்களுக்கும் களப்பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப்பணிகளுக்குச் சென்று வருவோம்.
எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிநிருவாக்கப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.
அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச்சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்
பயிற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தோம்.
பளை போர் முன்னரங்ககப் பகுதி
அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபடியால் அவர்களுடன் இணைந்து பளை போர் முன்னரங்ககப் பகுதியில் எம் மக்களின் காவற் தெய்வமாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள்.
29.05.2000 அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம்” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.
எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம். பளைப்பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது
எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.
பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி பெற்று புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்கு சென்றோம்.
எங்கள் புகழினியின் வித்துடல்
அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.
அதை விட புகழினியின் அப்பா என்னைப்பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ர மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய்
என்ரை மகள் எங்கே” என்று என்னைக் கட்டிப்பிடித்து கதறி அழுத்ததும் நானும் குற்றஉணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.
பின்பு 2002 ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் மருத்துவ மனையில் நான் கணக்காய்வு பணியை மேற்கொண்டிருந்தபோது
என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்துக்கு (சில்லாலைக்கு) செல்லப்போகிறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப்போகிறேன்” என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.
எங்களின் அன்புத் தோழி புகழினியே…
உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க என் நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.
உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள், தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன்
நடைபிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் பிணமாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இப்பொழுதும் நீ என்னை “அ ரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன்கதை எழுதி வைக்கப்படும்.
வரலாற்று பதிப்பு போராளி எழுத்தாளர் -நிலாதமிழ்.









