மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை ,ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள்.

இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது.

இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது.

எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது.

ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள்.

கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது.

அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் “சாதனா”.

பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன.

இவளது குடும்பத்தினர் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள்,

இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள்.

இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள்.

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர்.

பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள

ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரணகுழந்தையாகவே காணப்பட்டாள்.

வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது.

அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள்.

முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள்.

கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள், கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல்,

சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற

காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள்.

பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு காணப்பட்டது.

அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு

எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள்.

இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள்,

மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால் உளத்தாக்கமடைந்து “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா…?

அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்” என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள்.

இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் “இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்….

அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்”

என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள்.

பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள்.

இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது.

போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும்
மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி,

நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது.

அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள்.

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம்-ஈழத்துக் கொற்றவை

அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது.

சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து

க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள்.

எமது அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது.

அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறு கள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது.

அடிப்படைப் பயிற்சி முகாமில் அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள்.

எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம்,

சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில் அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள்.

முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம்,

அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு

விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள்.

அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன.

தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள்.

உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர் (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி,

தியாகச் செம்மல்லெப்.கேணல் திலீபன், முதலாவது கரும்புலி மாவீரரான கப்டன் மில்லர் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி

தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள்.

அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள்.

அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள்.

மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள்.

இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது.

அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள்.

இது தொடர்பில் அவளது தேடல், அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார்.

அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி,

விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார்.

பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு,

உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து,

தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது.

மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி) தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள்.

அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது.

அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள்.

பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர் திகைப்படைகின்றார்.

இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல்அவளிடம் காணப்பட்டது.

பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள்.

அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள்.

மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள்.

க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு

கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத்

தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன.

எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள்.

பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய

பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள்.

அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள்.

அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான்.

அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய
நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும்,

அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள்.

பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது,

சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள்.

சிங்களமொழி பேசும் இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது.

அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது.

மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது.

அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள

இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத் தொடர்பான

தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள்.

அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தெற்செயலாகக் காணக் கிடைத்தது.

தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என

தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள்.

அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது.

அவளது மனதில் ஈவிரக்கமற்றுப் பொது மக்களைக் கொன்று குவித்த அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது.

அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள்.

ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது.

ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள்.

அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள்.

ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய தெளிவான இலக்கு அமைகின்றது.

மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள்.

அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.

அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள்.

அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது.

அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய

போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும் இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று

கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து பணிப்பு வந்தது.

ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக்

காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது.

அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள்.

ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை.

திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள்

இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள்.

சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள்.

“உயிர் மின்னல் கீறும்

ஒரு ஓவியம்…

அது வரைகின்ற நேரம்

பெரும் காவியம்…

திரை மூடி வாழும்

ஒரு ஜீவிதம்…

வெளி தெரியாமல் ஆடும்

உயிர் நாடகம்….

புரியாத புதிராக

ஒரு தென்றல் போகும்…

புயலாகும் நேரத்தில்

இடியாக மாறும்…

அழியாத கதையாகி

வரலாறு மீளும்…

அவர் நாமம் ஒரு காலம்

தமிழீழம் பேசும்!”

யாவும் கற்பனை அல்ல…

-நிலாதமிழ். சிறுகதைகள்

தாயுமானவள்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

தாயுமானவள்

தாயுமானவள்

தாயுமானவள் “அண்ணா…அப்பாட்டைப் போப்போறேன்” “அம்மாட்டைப் போப்போறன் “… என்று உடலில் சத்திர சிகிச்சைக்காக ஏற்றப்பட்டு பின்னர் வலுவிழந்து கொண்டிருக்கும் அனஸ்தீசியா மருந்தின் தாக்கத்தினால் அரைகுறை மயக்கத்தில் புசத்திக் கொண்டிருந்தாள் அகல்.

அகலுக்கு கனவுலகில் எங்கோ வெண் பஞ்சுக் கூட்டத்தின் நடுவே தேவதூதர்களுடன் பறப்பது போலிருந்தது…

அவளுக்குத் தேவதூதர்களாக மலர்ந்த முகத்துடனும் கனிந்த பார்வுயுடனும் கண் முன்னே தென்படும் எல்லா மருத்துவப் போராளிகளும் தோன்றினார்கள்.

அருகிலே கலங்கல் உருவமாகத் தெரிந்த stethoscope ஐ கழுத்தில மாலையாக அணிந்தவாறு blood pressure ஐயும் pulse ஐயும் check பண்ணிக் கொண்டிருந்த

போராளி வைத்தியரான இனியன் ரொக்டரைப் பார்த்துத் தான் அகல் அனஸ்தீசியா மருத்தின் தாக்கத்தினால் கையைக் காலையடித்து திமிறிக் கொண்டு இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாள்.

அவனும் சகோதர பாசத்துடனும் தாயைப் போன்ற பரிவுடனும் அவளது தலையைத் தடவியவாறு “ஓமம்மா அம்மா அப்பாட்டை போகலாம்…

பிள்ளைக்கு காயம் எல்லாம் மாறினவுடன எல்லோரையும் பார்க்கப் போகலாம்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்…

அரைகுறை மயக்க நிலையில் அகலின் ஆழ் மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் கேள்விக் கணைகளாக இனியன் டொக்டரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன.

அவனும் அலுக்காமல் சலிக்காமல் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தவாறு இருந்தான்.

அழகிய பூவொன்று வாடினாற் போலிருந்த அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

போர் முன்னரங்கப் பகுதி ஒன்றில் களமருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில்

பி.கே இன ஆயுத ரவை ஒன்று அவளது இடுப்பு பகுதிக்குள்ளால் நுழைந்து நெஞ்சுப் பகுதியால் வெளியேறி இருந்தது.

இதனால் அவளது சிறு குடலில் பாதிப்பு ஏற்பட்டதனால் அதனின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது.

இனியன் டொக்டரின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…அவனுக்கு அகலைச் சிறுவயது முதலே தெரியும்.

அவனின் சித்தியின் பக்கத்து வீட்டில் தான் அவள் வீடு இருந்தது. அவனின் சித்தியின் மகள் மதுவின் சிறு வயதுத் தோழியும் பாடசாலை நண்பியும் தான் அவள்.

யாழ்ப்பாணம் திண்ணைவேலியில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் அவர்களது வீடு அமைந்திருந்தது.

அவன் அமைப்பில் போராளியாக இணைய முதல் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டு ஆண்டுகள் கல்விகற்ற காலத்தில்
சித்தி வீட்டில் தான் தங்கி நின்று கல்வி கற்றான்.

அப்போதுதான் அகல் அவனுக்கு அறிமுகம் ஆனாள்.அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.

அவனின் சித்தியின் மகளும் அவளும் ஆண்டு ஐந்து புலமைப்பரிசுப் பரீட்சையில் அதிஉயர் புள்ளிகள் பெற்று யாழ்நகரில் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.

அகலின் அப்பா யாழ் நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர்.

அம்மா வங்கி ஒன்றின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அம்மா, அப்பா, அவளைவிட இரண்டு வயது குறைந்த தம்பி என அழகிய அவளது சிறு குடும்பம் இருந்தது.

நல்ல சிவந்த நிறமும் கருந்திராட்சை போன்ற துரு துரு விழிகளும் செப்பு வாயும் சுருட்டை முடியும் கொழு கொழு கன்னங்களுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சிறுமியாக அவள் தோற்றம் அமைந்திருந்தது.

படிப்பிலும் விளையாட்டிலும் வலு கெட்டிக்காரி. மதுவுடன் விளையாட வரும்போது இனியனுடனும் அண்ணா…

அண்ணா என்று மிகவும் அன்பாக அழைத்துப் பழகுவாள்.

அவன் படிக்கும் புத்தகங்களை ஆர்வத்துடன் தானும் எடுத்து வாசித்துப் பார்த்து விட்டு அவற்றினைப்பற்றி எதுவும் நன்றாகப் புரியாத போதும் “அண்ணா…

நானும் கெட்டிக்காரியாகப் படித்து வளர்ந்ததும் ஒரு டொக்டராக வருவேன் ” என்று அழகிய அவளது கண்களில் கனவு மிதக்கக் கூறுவாள்.

மகிழ்வாகப் போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் அவர்களது குடும்பத்தில் முதலாவதாக ஒரு பேரிழப்பு ஏற்பட்டது.

கொழும்பில் அவளது மாமா பிரபல சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் குடும்பத்துடன் தான் கொழும்பில் வைத்தியர்களுக்கான குவாட்டர்சில் அகலின் அம்மம்மா, தாத்தாவும் வசித்து வந்தனர்.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மீது சிங்களக் காடையரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பில் கொழும்பில் பிரபல சத்திர சிகிச்சை நிபுணராக அவளது மாமா இருந்த போதும் தமிழர்கள் என்ற

காரணத்தினால் அவளது மாமா, மாமி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையும் குவார்டர்சில் வைத்துக் கதறக் கதற வாளால் வெட்டப்பட்டு எரியூட்டிக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவளது அம்மம்மா, தாத்தா கொழும்பில் அவர்கள் இடத்திலிருந்து சிறிது தள்ளி வேறு ஒரு இடத்தில் வசித்து வந்த உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்றபடியால் அந்தச் சம்பவத்தில் இருந்து தப்பியிருந்தனர்.

பின்னர் அந்த உறவினர் குடும்பத்துடன் சேர்ந்து அவளது அம்மம்மாவும், தாத்தாவும் உடுத்த உடையுடன் மாற்றுடை இல்லாது வவுனியா காட்டுப்பகுதியினூடாக நடையில் பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பி யாழ்ப்பாணம் வந்து அவளது குடும்பத்துடன் தங்கியிருந்தனர்.

அம்மம்மா, தாத்தாவிடமிருந்து ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை தூண்டித் துருவி அறிந்த அகலின் மனதில் அப்போதே இலங்கை அரசின் மீது ஆழமான ஒரு வெறுப்பு ஏற்பட்டிருந்து. அம்மம்மா,

தாத்தாவிடம் அறிந்த ஆடிக் கலவரம் தொடர்பான செய்திகளை இனியவனுடனும் பகிர்ந்து “ஏன் அண்ணா சிங்களவர்கள் இப்படித் தமிழ் மக்களுக்குச் செய்யினம் ” என்று கவலையுடன் கேட்பாள்.

இனியவன் அந்தச் சிறுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறுவான்.

பின்னர் காலவோட்ட மாற்றத்தில் காலத்தின் தேவை அறிந்து இனியவனும் தனது படிப்பை இடைநிறுத்தி விட்டு போராளியாக மாறி மருத்துவப்போராளியாக கடைமையாற்றிக் கொண்டிருந்தான்.


தமிழீழ மருத்துவப் பிரிவின் மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்ட அணி ஒன்றிற்கான மருத்துவப் போராளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக இனியவன் ஒரு முகாமுக்குச் சென்றிருந்த போது

“ரமணன் அண்ணா” என்று இனியவனின் சொந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு பெண்ணின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

திருப்பிப் பார்த்தால் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலுடன் வெள்ளை நிற சேட்டும் கறுப்புநிற ஜீன்சும் இடுப்பில் கறுப்புப் பட்டியும் அணிந்தபடி

மெல்லிய வெள்ளைநிறத் தோற்றத்துடன் அழகிய பெண் போராளி ஒருத்தி சிரித்த வண்ணம் நின்றிருந்தாள்.

இனியனுக்கு அவளைக் கண்டதும் முகம் எங்கோ கண்ட மாதிரி நினைவு வந்தது. யாரிது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது “ரமணன் அண்ணா…

என்னைத் தெரியவில்லையா…?நான் தான் மதுவின் பிரண்ட் ஜானு”…இப்ப என்ர பெயர் “அகல் ” என்றாள் சிரித்தபடி…

இனியவனுக்கு அவளைப் பார்க்க வியப்பாக இருந்தது.

கடைசியாக 12 வயதுச் சிறுமியாகக் கண்ட “ஜானுவை” இப்ப 20 வயது அழகிய இளம் பெண்போராளியான “அகல்” ஆகக் காணுகின்றான்.

அவளது தோற்றத்தில் முந்தி இருந்த குழந்தைத்தனம் மாறி இப்ப ஒரு “போராளிக்குரிய உறுதியும் வீரமும் மிடுக்கும்” காணப்பட்டது.

எனினும் கண்களில் ஏதோ ஒரு சோகம் இழையோடியிருந்ததை இனியவன் இனங்கண்டு கொண்டான்.

இனியவன் மேற்படிப்புக்காக மேற்கத்தைய நாடு ஒன்றிற்கு அமைப்பினால் அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகள் கற்கைநெறி நிறைவடைந்தவுடன்

ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கான தகுதிச் சான்றிதழுடன் தாயகம் திரும்பி வன்னிப்பகுதியில் மக்களுக்கும் போராளிகளுக்கான முழுமையான மருத்துவப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதனால் அவனுக்கு தனது சித்தி குடும்பம், ஜானு பற்றிய விபரங்கள் தெரியாதிருந்தது.

அகலுடன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு போகும்போது தான் சித்தி குடும்பம் பற்றிய அவளது குடும்பம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான் இனியவன்.

இடிமேல் இடியாக அகலின் குடும்பத்திற்கு அடுத்த இரண்டாவது இழப்பும் ஏற்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலின் குண்டு வீச்சில் அவளது சிறிய தம்பியையும் அவள் இழந்திருந்தாள்.

இனியவனுக்குத் தெரியும் அகல் தனது தம்பி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாள் என்பது.

தம்பியின் இழப்பு பற்றி அவள் கூறும் போது கண்கள் சிறிது கலங்கினாலும் போராளிக்குரிய மனவுரத்துடன் கவலையை மறைத்து அவள் காட்டிய முகமாற்றத்தை பார்த்த இனியவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது தம்பியின் இழப்புக்குப் பின்னர் அவளது அம்மா, அப்பா, அம்மம்மா , தாத்தா எல்லோருக்கும் எல்லாமுமாக அவள் தான் இருந்திருக்கிறாள்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அவ்வளவு இழப்புகள் போர்ச்சூழலுக்கு மத்தியிலும் மனவுறுதியுடன் கற்று மிகச்சிறந்த அதி பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் உயிரியல்துறையில் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் நாட்டின் போர்ச்சூழல் அவளைத் தொடர்ந்து கல்வி கற்க விடவில்லை. இராணுவத்தின் நிலப்பறிப்புகள், விமானக் குண்டு வீச்சுகள் ,

எறிகணை வீச்சுகள் இதனால் தொடர் இடப்பெயர்வுகள் எனத் தொடர்ந்த இராணுவ அட்டூழியங்களினால் காலத்தின் தேவை கருதி தன்னையும் போராளியாக இணைத்துக் கொண்டாள்.

அவள் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்றபடியினால் மருத்துப்பிரிவிற்குத் தெரிவு செய்யப்பட்டாள்.

அவளின் மிகச்சிறந்த க.பொ.த சாதாரண தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தமிழீழ மருத்துப் பிரிவில் போராளி மருத்துவர்களுக்கான மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்க நியமிக்கப்பட்டிருந்தாள்.

அங்கே போராளி மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரையாளராக இனியவன் வந்திருந்த போதே அகலை அவன் சந்தித்தான்.

அந்த மருத்துக் கல்லூரியில் அகல் தான் சிறிய வயதுப் போராளி .

ஆனாலும் அறிவில் முதிர்ந்த மற்றைய மருத்துவப் போராளிகளுக்கு நிகராக மிகவும் ஆர்வத்துடன் கற்கைநெறியைத் தொடர்ந்தாள்.

அங்கே மருத்துவப் போராளிகள் கற்கைநெறியையும் மேற்கொள்ளும் நேரத்தில் தேவைப்பட்டால் களமருத்துவப் பணிகள்,

காயப்பட்ட போராளிகளைப் பராமரித்தல், வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து காயப்பட்டு வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சைகளில் உதவியாகச் செயற்படுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுவார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மருத்தவப் போராளிகளின் பங்களிப்பானது தலையாயதும் காத்திரமானதுமாகும்.

களத்திலே காயப்பட்டு வரும் போராளிகளுக்கு அவர்களே அம்மாவாகவும் அப்பாவாகவும் அனைத்துமாகவும் இருந்து களத்திலும் சரி மருத்துவ முகாம்களிலும் சரி தங்களது பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளுவார்கள்.

தங்கள் தூக்கத்தை பசியை ஒறுத்து ஒரு தாய் தனது குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பாளோ அவ்வாறே காயப்பட்டு வரும் போராளிகளை அன்புடன்

அரவணைத்து ஆறுதல் கூறி குளிப்பாட்டி உணவூட்டி உடைமாற்றி எந்த அருவருப்போ முகச்சுளிப்போ அற்று எந்நேரமும் இன்முகத்துடன் கடமையாற்றுவார்கள்.

அவ்வாறே மருத்துவ முகாமிலே அகலும் அனைவருக்கும் தாயுமானவளாக விளங்கினாள்.

பாரிய விழுப்புண்களுக்குள்ளான போராளிகளுக்கு venflon மூலம் அடிக்கடி (injection) ஊசி மருந்து ஏற்றும் போது கை வீங்கி injection ஏற்ற முடியாதவாறு கடும் வேதனையாக இருக்கும்.

அதனால் மருத்துவப் போராளிகள் injection போட வரும்போது காயப்பட்ட போராளிகள் வலிவேதனையில் கத்தியவாறு போட மறுப்பதுண்டு.

ஆனால் அகல் injection போட வந்தால் அவர்கள் அமைதியாகப் போட விடுவார்கள்.

அவர்களுக்கு வலி தெரியாதவாறு நகைச்சுவைக் கதைகள் கூறி மென்மையாக பக்குவமாகச் சிரித்தபடியே injection ஐ ஏற்றிவிடுவாள் அவள்.

அதனால் காயப்பட்ட போராளிகள் எல்லோரும் “அகல் டொக்டர் வந்தால் தான் injection போடுவேன் ” என்று அடம் பிடிப்பதுண்டு.

அதைவிட வலிவேதனைகளால் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் போராளிகளையும் அன்பாக கதைத்து மிரட்டி தனது குழந்தைகளுக்குத் தாய் உணவூட்டுவது போன்ற பரிவுடனும் பக்குவத்துடனும் ஊட்டி விடுவாள்.

அவர்களும் அவளது அன்பான அணுகுதலைக் கண்டு எதிர்ப்புக் காட்டாமல் உண்ணுவார்கள்.

மருத்துவப் போராளியாக இருந்த போதும் அகலின் மனதிலும் எல்லாப் போராளிகளைப் போலவும் தானும் சண்டைக் களத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவா நீண்ட காலமாகக் குடிகொண்டிருந்தது.

தனது பொறுப்பாளரிடம் அடிக்கடி “என்னை ஒரு தடவை என்றாலும் சண்டைக்கு விடுங்கோ அக்கா” என்று நச்சரிப்பாள்.

மருத்துவத்துறையில் கற்று நன்றாகத் தேர்ச்சியடைந்த போராளியான அவளைச் சண்டைக்கு விட்டு இழந்தால் அவளை மாதிரி இன்னொரு

மருத்துவப் போராளியை கற்பித்து பயிற்றுவித்து உருவாக்குவது கடினம் என்ற படியால் அவளது பொறுப்பாளர்

“இயக்கம் சொன்னதைத் தான் நீர் செய்ய வேண்டும்…

நீர் சொன்னதை இயக்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது…

இயக்கத்திற்கு எங்க எங்க யார் யாரை எப்போது எந்த நேரத்தில விடவேண்டும் எண்டு தெரியும்…

அதுவரை இயக்கம் தந்த உம்மட வேலையைப் பாரும் ” என்று அகலின் கோரிக்கையைத் தட்டிக் கழித்தவாறே வந்தார்.

ஆனால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற மாதிரி அகலின் தொடர் நச்சரிப்பால் அவளின் கோரிக்கையை ஏற்றுச் சிறிது காலம் போர் முன்னரங்குகளில் களமருத்துவப் பணியை மேற்கொள்ள அனுமதித்தார்.

அவளும் பெருமகிழ்வுடன் தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்வுடன் தனது மருத்துவ முகாம் போராளிகளிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றாள்.

காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த போராளிகளுக்கே தாயைப் போன்று பரிவு காட்டிய அவளது பிரிவு மிகவும் தாங்க முடியாதிருந்தது.

ஆனால் போராளிகள் என்றால் வலியும் பிரிவும் இழப்பும் சாதாரணம் தானே. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் அவளுக்கு விடை கொடுத்தார்கள்.

படையணிப் போராளிகளுடன் இணைந்து கடுமையான போர்ப் பயிற்சியினை எடுத்து நிறைவு செய்ததும் அவளும் போர் முன்னரங்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டாள்.

களத்திலேயும் அகலின் பணி காத்திரமானதாக அமைந்தது. பச்சைநிறச் சீருடையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை

முதுகிலும் நெஞ்சில் கோல்சரும் குறுக்கே துப்பாக்கியையும் கொழுவியபடி வோக்கிடோக்கியையும் கையில் வைத்துக் கொண்டு மிடுக்கான நடையுடன் இன்முகத்துடனும் நேர் கொண்ட பார்வையுடனும் போர் முன்னரங்கப்

பகுதிகளில் காவலரண்களுக்கு அவள் சென்று வரும் போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நேரே கண்ட மாதிரி பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், கிளைமோர் தாக்குதல்கள், கண்ணிவெடிகள்,

ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல்கள் அனைத்திற்குள்ளாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது முன்னரங்குகளில் நிற்கும் போராளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கச் சென்று வருவாள்.

அப்படித்தான் ஓர்நாள் போர் முன்னரங்கிலே நிற்கும் ஒரு போராளிக்கு கடும் காய்ச்சல் அடிக்க மெயினில் நின்ற அவளுக்கு வோக்கி டோக்கியில் அழைப்பு வந்தது.

அகலும் அவளது உதவியாளரான இன்னொரு பெண் போராளியும் போர் முன்னரங்கப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என அறிவுறுத்தல் வந்திருந்தது.

மெயினில் நின்ற பொறுப்பாளர் அகலுக்கும் அவளுக்கு உதவியாகச் சென்ற மற்றைய போராளிக்கும் பாதுகாப்பாகச் சென்று வரக் கூறி ஏதும் உதவி

தேவைப்பட்டால் உடனே வோக்கி டோக்கியில் அறிவிக்கும்படியும் உடனே தயாராக நிற்கும் முறியடிப்பு அணியைத் தாம் அனுப்புவதாகவும் சொல்லி அனுப்பினார்.

காய்ச்சல் வந்த போராளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து விட்டு அகலும் அவளது உதவியாளரும் மெயினை நோக்கித் திருப்பிச் சென்றுகொண்டிருந்தனர்.

வரும் போது பொறுப்பாளரினால் எச்சரிக்கை செய்யப்படிருந்ததனால் இருவரும் சுற்று முற்றும் அவதானமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தனர்.

அகலுக்கு வரும் போது இல்லாத ஏதோவொரு வித்தியாசம் தென்பட்டது. அதனைத் தனது உதவியாளராக வந்த போராளியிடம்

“கயல் எனக்கு வரும் போது இருந்ததை விட இப்போது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது என்று கூறினாள்.

அவளும் “ஓம் அக்கா எனக்கும் வித்தியாசம் தெரிகிறது என்றாள்” . ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று அகலின் உள் மனம் உணர்த்தியது.

அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து அண்ணளவாக 200m தூரத்தில் திடீரென்று ஆட்காட்டிக் குருவிகள் கீச்சிட்டவாறு சிறகடித்துப் பறந்தன.

உடனே அகலும் மற்றைய போராளியும் எச்சரிக்கையாகி அருகில் நின்ற மரத்திற்குப் பின்னால் காப்பெடுத்தவாறு நிலமையினை அவதானித்தனர்.

சிறிது தூரத்தில் இலைகுழைகளால் உருமறைப்புச் செய்த தொப்பியணிந்த ஆறேழு இராணுவத்தினரின் தலைகள் தென்பட்டன.

அகல் தனது துப்பாக்கியைத் தயார்நிலையில் வைத்தபடி கயலுக்கும் துப்பாக்கியைத் தயார்நிலையில் வைக்கும்படி கூறிவிட்டு உடனே வோக்கியில்

மெயினிலுள்ள பொறுப்பாளருக்கு அருகில் உள்ள இராணுவத்தினருக்கு கேட்காத வகையில் நிலமையைத் தெரியப்படுத்தினாள்.

அவரும் அவர்கள் நிற்கும் இடத்தை தெளிவாகக் கேட்டு விட்டு இயன்றவரை சண்டையைத் தவிர்த்து தமது உதவி முறியடிப்பு அணி வரும்வரை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.


அகலும் “சரியக்கா அப்படியே செய்கிறோம் ” என்று கூறிவிட்டுத் திரும்பும் போது அகலின் அசைவினை ஒரு ஆழ ஊடுருவும் இராணுவத்தினன் அவதானித்து விட்டு அவளை நோக்கிச் சுடத் தொடங்கி விட்டான்.

மிகவும் பாரமான மருத்துவப்பையினைத் தோளில் சுமந்தவாறு அகலும் மற்றைய போராளியான கயலும் மரங்களுக்கிடையே காப்பெடுத்தவாறு காப்புச்சூட்டை வழங்கியவண்ணம் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இராணுவ அணியிலோ ஏழு பேர் இருந்தார்கள்.

ஆனால் இங்கு அகலும் கயலும் மட்டும் தான். ஆனால் இருவருக்கும் எடுத்த கடும் பயிற்சி கைகொடுத்தது.

இருவரும் மனவுறுதியுடனும் ஓர்மத்துடனும் பதில் தாக்குதலை வழங்கிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் உதவி முறியடிப்புத் தாக்குலணியினரின்

லீடர் அகலுடன் வோக்கியில் தொடர்பு கொண்டு தங்கள் அணி அருகில் வந்து விட்டது மனம் தளராது இருக்கும்படி தெரிவித்தார்.

மருத்துவப்பையுடன் மரத்துக்குப் பின்னே காப்பெடுத்து நின்று கொண்டிருந்த அகலினை இராணுவத்தினரின் பி.கே இன ரவை ஒன்று இடுப்பைத் துளைத்தவாறு உள்ளே புகுந்து நெஞ்சு வழியாக வெளி வந்தது..

இரத்தம் பெருக்கெடுத்தோட கீழே விழுந்தாள் அகல்.

அருகே இன்னொரு மரத்துக்குப் பின்னால் காப்பெடுத்து நின்றிருந்த கயல் இதனை அவதானித்து ஓடி வந்து அகலின் காயங்களுக்கு இரத்தம் வெளியேறாதவாறு பீல் கொம்பிரசை வைத்துக் கட்டினாள்.

இவர்கள் நின்ற இடத்தைக் குறிவைத்தபடி மூன்று இராணுவத்தினர் சுட்டவாறு முன்னேறி வந்து கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த அகல் “என்னால முடியாமல் இருக்கு …

என்னைச் சுட்டுவிட்டு நீ தப்பிச் செல்” என்று கயலிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கயல் அதனை ஏற்றுக் கொள்ளாது “அகல் அக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில எங்கட அணி வந்திடும்….

அதுவரை கொஞ்சம் தாக்குப் பிடியுங்கோ…நான் அவங்களுக்கு டைவர்ட் காட்டி எதிர்ப்பக்கம் ஓடுறன்…

எப்படியாவது நீங்கள் தப்பிச் செல்லுங்கோ அக்கா…

உங்கட சேவை இயக்கத்துக்கு முக்கியம் தேவை..உங்களால் நிறையப் போராளிகளையும் மக்களையும் காப்பாற்ற முடியும்…

இயக்கம் உங்களை எவ்வளவு செலவளித்து படிப்பித்தது …அதற்கு பிரயோசனம் இருக்கோணும் ” என்று கூறியவாறு அகல் மறிக்க மறிக்க இராணுவத்தினரை நோக்கிச் சுட்டவாறு முன்னேறிச் சென்றாள்.

மூன்று இராணுவத்தினரின் கவனமும் கயலை நோக்கித் திரும்பியது. கயலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி ஒரு இராணுவத்தினன் வீழ்ந்தான்.

மற்ற இரண்டு இராணுவத்தினரின் ரவைகளும் கயலின் உடலைத் துளைத்துச் செல்ல கயலின் உடல் அவள் நேசித்த மண்ணில் வீழ்ந்தது.

அவளின் இரத்தத்தால் அந்தமண் சிவந்தது.

இப்படித் தான் எத்தனையோ போராளிகள் தன்னலம் கருதாது நாட்டினதும் இயக்கத்தினதும் தேவையை உணர்ந்து தம்முயிரை ஈய்ந்துள்ளனர்.

பின்னர் போராளிகளின் உதவி முறியடிப்பு அணி அந்த இடத்தினை வந்தடைந்திருந்தது.

அவர்கள் இராணுவ ஆழ ஊடுருவும் அணிக்கு எதிரான தாக்குதலை நடாத்தி மிகுதி இராணுவத்தினரையும் கொன்றொழித்து அவர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி காயப்பட்ட அகலையும் பின்னகர்த்தினர்.

அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அனுப்பப்பட்ட போதுதான் அங்கு இனியன் அகலைக் கண்டான்.

மருத்துவப் போராளிகளின் சிறந்த மருத்துவ சிகிச்சையும் பராமரிப்பும் அவளின் மனவுறுதியும் சேர்ந்து அகலின் காயங்களை வெகு விரைவில் குணமடையச் செய்தது.


பின்னர் தன்னைக் காப்பாற்றிய கயலின் அகலா நினைவையும் கனவையும் நெஞ்சில் சுமந்தவாறு தனது கற்கை நெறியைத் தொடர்ந்து நிறைவு செய்து

ஒரு முழுமையான போராளி வைத்தியராகத் திரும்பவும் கழுத்தில் மாலையாக ரெதஸ்கோப் அணிந்தவாறு இன்முகத்துடன் போராளிகளுக்கும் மக்களுக்குமான தாயகத்தின் தாயுமானவளாக அகல் தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றாள்.

யாவும் கற்பனை அல்ல…

நிலாதமிழ்.சிறு கதைகள்