மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

Spread the love

மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.

இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில்

உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.

இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பரத் ருத்ரவார் கூறியதாவது:-

உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.

எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.

அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்

    Leave a Reply