தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ,இந்திய கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கிறோம்.
தொப்புள் கொடி ஊறவுகளாக இருக்கிற தமிழக மீனவர்களை நாங்கள் திட்டமிட்டு கைது செய்யவில்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“ இலங்கை கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது இந்திய மீனவர்கள் தான். அதாவது இந்திய மீனவர்களின் தொடரும் அத்துமீறல்களினால் தான் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உண்மையான நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது இந்தியாவில் எமக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துகின்றனர்.அந்தப் பேரணியில் தமிழகத்தின் கனிமொழி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகையால் கனிமொழி உள்ளிட்டவர்களிடம் நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது, உங்களுடைய நாட்டு படகுகள் உங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள்.
மேலும் கனிமொழிக்கும் அமைச்சருக்கும் நாங்கள் சொல்ல வேண்டியது வேறேதுமில்லை. நாங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். எனினும் தொப்புள் கொடியாக இருந்தாலும் எங்கள் கடலுக்கு வந்து எங்கள் மீன்களை பிடிக்க வேண்டாம். எங்கள் வளத்தை அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் யாரும் இங்கு வெறுமனே கைது செய்யப்படவில்லை. உங்கள் கடல் எல்லையை தாண்டி எமது கடல் எல்லைக்கு வருகிற போதே நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கடல் எல்லைக்குள் யாரும் வருகின்ற போது நீங்கள் எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்குறீர்களோ அதேபோல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகிற போது நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம்.
அதாவது எமது கடல் எல்லைக்குள் யாரும் நுழைகிற போது கடற்படையினர் கைது செய்கின்றனர். இவ்வாறு கைது செய்பவர்களை நீதிமன்றத்தில் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து நீதிமன்றில் பாரப்படுத்துகிற போது நீதி மன்றமே தீர்ப்பை வழங்குகிறது.
குறிப்பாக யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இப்போது தான் ஓரளவிற்கு தலைதூக்கி கொண்டு வருகின்றனர்.
ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உங்களது ஆயிரக்கணக்கான படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி எமது கடல்வளத்தை நாசமாக்கி செல்கின்றனர்.
இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. எனவே எமது கடல் பரப்பிற்குள் அத்துமீற வேண்டாம் ” என தெரிவித்துள்ளதுடன் இந்திய மீனவர்களுக்கு முதலில் கூறி அத்துமீறுவதை தடுத்து நிறுத்துங்கள் எனவும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.






