40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி

Spread the love

40 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட

40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.10.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொவிட்-19 கொடிய தொற்றினால் முழு உலகமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் இந்து மதத்தின்

விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் குறியீட்டு ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர், இவ்வாறானதொரு நெருக்கடியான காலப்பகுதியில் நாம் இந்து ஆலயங்களுக்கு தலா

50,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுத்து சமய விழுமியங்களை பாதுகாப்பதுடன், நாட்டின் நலத்திற்காக பிரார்த்திப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்.

சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இந்து மதத்தையும், இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.

ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் நற்காரியங்களைத் தொடங்கும் இந்த நவராத்திரி காலப்பகுதியில் இந்த புண்ணிய நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றோம்.

கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது அனைவரும் சுகாதார

அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு

வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன்,

பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன,மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply