புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
பிறந்த ஆண்டே பிறந்த ஆண்டே – நீ
பிறந்த மனை எதுவோ ..?
பிறந்த ஊரை சொல்ல முடியா
பிழைப்பு ஏன் உனக்கோ …?
வெல்ல முடியா சொல்லுக்குள்ளே
வெந்து போனவரே – நாளை
நல்ல வாழ்வு தருவாய் என்று
நம்பி நாம் வரவோ ..?
வீணாய் கரைந்து விரையம் ஆகி
வீழ்ந்த நாளில் எல்லாம் ….
சுகத்தை பறித்து சுமையை ஏற்றி
சுட்டாய் நீ எனலாம் ……
நாளை கடத்தி ஆண்டை விழுங்கி
நாயாய் அலைய வைத்தாய் – இன்று
நல்ல வாழ்வு தருவாய் என்றே – ஏன்
நாடி ஓடி வந்தாய் …?
பொல்லால் தாக்கி நெஞ்சை கிழிக்கும்
போர்களை நீ தந்தாய்….
வெல்ல முடியா வறுமை தந்து
வேகி சாக வைத்தாய் ……
இனியும் உன்னை நம்பிடவோ
இந்த ஆண்டே நீ பிறந்தாய் …?
கொஞ்சு தமிழா கொஞ்சம் எழடா – இந்த
கொடிய ஆண்டை விரட்டி விடடா….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்