நில்வாலா மற்றும் ஜின் நதிகளின் சில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு
நில்வாலா மற்றும் ஜின் நதிகளின் சில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு நீடிப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
நில்வலா மற்றும் ஜின் ஆறுகளின் சில பகுதிகளில் சிறு வெள்ள நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல இடங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை, மஹா ஓயாவின் மேல் பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது.
அக்குரஸ்ஸ மற்றும் நில்வலா ஆற்றின் கீழ் நீரோடைப் பகுதிகளிலும், ஜின் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் உள்ள பத்தேகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறு வெள்ள நிலைமைகள் தொடர்கின்றன.
இப்பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு நீர் மட்டம் உயர்வடையாத போதிலும், குறிப்பிட்ட சில தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
களு கங்கையின் மேல் பகுதிகளில் உள்ள நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. எவ்வாறாயினும், மில்லகந்த மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நீர் மட்டம் சிறிய வெள்ள வரம்புகளுக்கு அருகில் இருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், களனி ஆறு, அத்தனகலு ஓயா மற்றும் மஹா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது, அதேவேளை மகாவலி ஆற்றின் மேல்பகுதிகளில் அபாயகரமான உயர்வு எதுவும் பதிவாகவில்லை.
எவ்வாறாயினும், நில்வலா மற்றும் ஜின் ஆறுகளிலும், ஈர வலயத்தில் உள்ள ஏனைய ஆறுகளிலும் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து வேகமாக உயரலாம் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறுகிய காலத்திற்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர் மட்டத்தைப் பொறுத்து நீர்த்தேக்கக் கசிவு கதவுகளின் திறப்பு மாறக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.







