ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திசைவழிப்பாதையில் ஐந்து விடயங்கள் : மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

Spread the love
ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திசைவழிப்பாதையில் ஐந்து விடயங்கள் : மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கு உலகச் சூழலைக் கையாள்வது தொடர்பான அனைத்துலக உறவுக் கொள்கை தொடர்பில் இந்நாளில் சிந்திக்குமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக்தை ஏற்றக்கொள்ள வைப்பதற்கான மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள், வியூகங்கள், பூகோள அரசியல் தரும் வாய்ப்புகள், இடையூறுகள், இலங்கைத்தீவு தொடர்பிலான அனைத்துலக முடிவுகளில் தமிழ்மக்களை தவிர்க்க முடியாதவொரு ஒரு தரப்பாக நிலைநிறுத்துதல் உட்பட 5 முக்கியமான விடயங்கள் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தி 2019 :

தமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாள்.
சுதந்திர வாழ்வின் உன்னதத்தை தம் இதயக்கூட்டினுள் சுமந்தவாறு தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் களமாடிய நம் காவிய நாயகர்களின் பெருநாள்.

தமிழீழத் தாயகத்தில் தேச விடுதலையும் சமூக விடுதலையும் ஒருசேர மிளிர வேண்டும் என்பதற்காய் தம்மினிய உயிர்களை ஈகம் செய்து வரலாறு படைத்த நம் வீரமறவர்களை நமது மக்கள் நினைவுகூர்ந்து வணங்கி நிற்கும் நன்நாள்.

ஈழத் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்களின் நினைவு நாள்.

மாவீரர்களின் கனவெல்லாம் எமது மக்கள் சமத்துவமாக, பாதுகாப்பாக, கௌரவமாக, இனஅழிப்புக்கு உள்ளாகாது, சமூகநீதி நிலவும் சமூகத்தில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதாகவே இருந்தது.

இதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தாய்த்திருநாடு ஒன்றை அமைப்பதனைத் தவிர வேறுவழியேதுமில்லை என்பதனைத் தீர்க்கமாக உணர் ந்தவர்களாக தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் களமாடி நின்றவர்கள் நமது மாவீரர்கள்.

நமது மாவீரர்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக நமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ போராடவில்லை.

சிங்கள தேசத்தையும் அதன் இருப்பையும் அங்கீகரித்தவாறு தமிழர் தேசத்தையும் அதன் இருப்பையும் அங்கீகரிக்குமாறு சிங்கள தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் நமது மாவீரர்கள் கோரிநின்றார்கள்.

தேசவிடுதலையையும் சமூகவிடுதலையையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட போராட்டம் என்ற வகையில், இனஅழிப்பை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்ற வகையில், ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற போராட்டம் என்ற வகையில, உலகில் போராடும் மக்கள் எல்லோருக்கும் நமது மாவீரர்கள் முன்னெடுத்த போராட்டம் தோழமைக்குரியதொன்றாகவே இருந்தது.

மாவீரர்கள் சிந்திய குருதியால் எமது தாயகத்தின் மண்ணும் வானும் கடலும் சிவந்து போயுள்ளன. தேசத்தின் காற்றெங்nகும் மாவீரர்களின் மூச்சுக் கலந்து நிறைந்து போயுள்ளது.

சற்று அமைதியாக இருந்து கண்களை மூடி நமது மனக்கண்ணைச் சற்று திறந்தால் போதும். நமது மாவீரர்கள் எமது தாயகம் எங்கும் அணியணியாகத் திரண்டெழுந்து வருவதை எம்மால் உணர முடியும். மாவீரர்களது வீரத்தாலும் ஈகத்தாலும் எமது மண் மகிமை பெற்றுள்ளது. எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் எமது மண்ணையும் மக்களையும் கபளீகரம் செய்ய முடியாதவாறு மாவீரர்கள் காவல் காத்து நிற்கிறார்கள்.

எமது பிரதேசங்களை ஆக்கிரமித்து நின்றாலும் எமது மக்களின் மனங்களை என்றுமே சிங்களத்தால் வெற்றி கொள்ள முடியாத அளவுக்கு நமது மாவீரர்கள் எம்மைப் பாதுகாத்து நிற்கிறார்கள்.

தமிழீழத் தாயகத்திலும் உலகப்பரப்பெங்கும் தமிழீழ மாவீரர்களை மக்கள் தமது இதயக்கூட்டில் இருத்தி நினைவுகொள்ளும் இன்றைய மாவீரர் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மாவீரர்களுக்குத் தனது வீரவணக்கத்தைத் தெரிவித்து நிற்கிறது.

அன்பான தமிழ் மக்களே!

இன்றைய மாவீரர் நாளில் மாவீரர் கனவுகளை எவ்வாறு நனவாக்குவது என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்தலும் அச் சிந்தனைக்கு செயலுருவம் கொடுப்பது பற்றிய எண்ணங்களை திரளச்செய்வதும் பொருத்தமானதாகும்.

மாவீரர்களுக்கு நாம் செய்யும் வணக்கம் அதற்குரிய அரசியற்பரிமாணத்தைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். மாவீரர்களை நாம் வணங்கும்போது அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ அந்த இலட்சியத்தை வலுப்படுத்தும் வகையில் நாம் நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளல் முக்கியமானது.

தமிழீழத் தாயகம் தற்போது சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதனால் அங்கு மாவீரர்களின் இலட்சியமான தமிழீழத் தனியரசு பற்றிப் பேசவோ அல்லது செயற்படவோ முடியாத நிலை இருப்பதனை நாம் அறிவோம்.

ஆனால் அங்கு ஈழத் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாகச் சிந்திப்பதற்கும், தேசமாகச் செயற்படுவதற்கும், தமிழர் தேசத்தை வலுப்படுத்துவதற்கும், தமிழ்த்தேசத்தை சிதைக்க சிங்களம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பதற்கும் எம்மால் முடியும். இதற்கு முக்கியமானது நமது இலட்சியம் பற்றிய தெளிவு நமக்கு இருத்தலாகும்.

எப்போதும் தேசவிடுதலை, சமூகநீதி குறித்த நமது இலட்சியம் தொலைநோக்குக் கொண்டதாக இருக்கும். உன்னத நோக்கைக் கொண்டதாக இருக்கும். உடனடி யதார் த்;தத்துக்கும் இந்த இலட்சியத்துக்கும் இடையே சற்றுத்தூரம் இருக்கத்தான் செய்யும். இதனால்தான் இலட்சியத்தை அடைவதற்குப் போராட்டம் தேவைப்படுகிறது. இலகுவாகக் கிட்டி விடுமொன்றாகவும் இலட்சியம் அமைந்து விடுவதில்லை.

மாவீரர் கனவுகளை நெஞ்சிலே சுமப்பவர்கள் எவரும் யதார்த்தம் என்று கூறி, உடனடியாகக் காணப்படும் அகப்புறக் காரணிகளைக் காரணம்காட்டி இலட்சியத்தைப் புறம் தள்ள மாட்டார்கள். மாறாக இலட்சியத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஏற்ப யதார்த்தத்தை அணுகுவார்கள். கையாள்வார்கள். யதார்த்தத்தை இலட்சியம் நோக்கி வளைப்பார்கள். முன்னேறுவார்கள். யதார்த்தத்துக்கும் இலட்சியத்துக்குமிடையிலான இடைவெளி குறையத் தொடங்கும்.

இதனால், நாம் நமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டுமானால் உண்மையில் அக் கனவுகளை நெஞ்சிலே சுமப்பவர்கள் மக்களைத் தலைமை தாங்க வேண்டும். அந் நிலைமை உருவாகும்போதுதான் மாவீரர்கள் கனவுகளை நனவாக்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகப் பகுதியில் வலுப்பெறும் நிலை உருவாகும்.

தற்போதய காலகட்டம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலகட்டம். இன்றைய சூழலில் மாவீரர் கனவுகளை நனவாக்கும் எண்ணமும் செயலும் அரசியல் இராஜதந்திரவழிமுறைகளில் மையம் கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. இதனால் மக்களைத் திரளாக்கும் செயற்பாடுகளும் மக்கள் அரசியற்போராட்டங்களில் பரந்துபட்ட அளவில் பங்குபற்றலும் இப் போராட்டப்பாதையில் அவசியமானவை.

காலத்துக்கேற்ப போராட்டவடிவங்கள் மாறுபட வேண்டும் என்பதனை தேசியத்தலைவர் அவர்கள் «போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது» எனத் தீர்க்க தரிசனமாகத் தெரிவித்துள்ளமை நமக்கொரு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது.

அன்பான மக்களே,

இம் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழின அழிப்புக் குற்றவாளி கோத்தாபய இராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியடைந்திருக்கிறார். இலங்கைத்தீவில் சிங்களதேசத்தின் மத்தியில் சிங்கள பௌத்த தேசியவாதம்; ஆழமாக வேருன்றியிருப்பதனை இது நன்கு வெளிப்படுத்துகிறது. கோத்தாபய என்ற தமிழினவழிப்புக் குற்றவாளியை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் (International Criminal Court) முன்னரும், சிறிலங்கா நாட்டினை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றின் (International Court of Justice) முன்னரும் நிறுத்தும் போராட்டத்தை நாம் வீச்சாக முன்னெடுப்போம். சிறிலங்காவின் தமிழின அழிப்பாளிகளை அனைத்துலக அரங்கில் நீதியின் முன் நிறுத்தும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கோத்தாபய இராஜபக்ச அரசதலைவராகத் தேர்வு செய்யப்பட்டமை தார்மீகத் தளத்தில் பலம் சேர்க்கும். நீதியின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவை எமக்குப் பெற்றுத் தரும்.

சிறிலங்கா அரசியற்கட்டமைப்பு சிங்களப் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயிருக்கும் நிலையில் இக் கட்டமைப்பின் கீழ் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் எத்தகைய தீர்வையும் கண்டு விட முடியாது என்பதனை நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கூறி வருகிறோம். இக் கட்டமைப்பினை மேலும் இறுக்கமான சிங்கள பௌத்த நிறுவனமாக வளர்த்தெடுப்பதை கோத்தாபய – மகிந்த சகோதரர்கள் செய்வார்கள்.

சிறிலங்காவில் சிங்கள மேலாண்மைக்குள்; தமிழ் மக்களைக் கொண்டுவரும் நோக்குடன் சிறிலங்கா அரசால் தமிழின அழிப்புத் திட்டம் வகுக்கப் பட்டிருக்கிறது. இது சிறிலங்காவின் அரச கொள்கையாக, முன்னுரிமை கொண்ட செயற்திட்டமாக இருந்து வருகிறது. இதனாற்தான்; சிறிலங்கா அரசினை ஆட்சி செய்யும் எவரும் தமிழின அழிப்பைத் தமது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறார்கள். இங்கு தமிழின அழிப்பு என்பதனை தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய தகமைகளையெல்லாம் அழித்து, அவர்களை உதிரி மக்களாகச் சுருக்கி சிங்களத்தின் மேலாண்மைக்கு உட்படுத்தல் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்

புதிய ஆட்சியாளர்கள்; தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ‘சிறிலங்கர்’ என்ற ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையினை வேகமாக நடைமுறைப்படுத்த முயல்வர். சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சார்ந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுக்க முயற்சிப்பார்கள்.

புதிய ஆட்சியாளார்கள் சீனாவுடன் கூடிக்குலவிக் கொண்டு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை உதாசீனம் செய்ய மாட்டார்கள் என்பதே எமது அவதானிப்பு. இம் மூன்று உலக சக்திகளையும் தமக்கேற்றவாறு ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தியும், சில இடங்களில் இணைத்துப் பயன்படுத்தியும் தமது இலக்கினை அடைந்து கொள்ளும் வகையில்தான் இவர்கள் செயற்படுவார்கள். இந்த நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி அர்ப்பணிப்பு மிக்க ஜனநாயகவழிப் போராட்டங்களுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய காலமாக இது அமைகிறது. எமது பார்வையில் தமிழ் மக்கள் போராடினால்தான் வாழ்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்கள் என்றே கருதுகிறோம். இது சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். இதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வது நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றதாகவே அமையும். இருந்த போதும் இதுதான் யதார்த்தமாக அமையப் போகிறது.

தமிழ் மக்கள் தாம் எதிர் கொள்ளும் சவால்களைத் தெளிவாக அடையாளம் கண்டாக வேண்டும.;; தாயகத்தில் தமிழ் மக்களின் தொகை போர் காரணமாகவும், புலப்பெயர்வு காரணமாகவும் வீழ்ச்சி கண்;டிருக்கிறது. இத் தொகையில் மேலும் வீழ்ச்சியினை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களையும் சிங்கள ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.

இம் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டிலோ இலட்சிய வேட்கையிலோ பாதிப்பு ஏற்படாதவகையில் நாம் எம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் தொகை ஏறத்தாழ 10-12 இலட்சம் மக்களைக் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. எவ்வாறு யூத மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் தேசத்துக்கு தாம் விரும்பிய போது திரும்புவதற்கான வகையில் அவர்களது Law of Return எனப்படும் திரும்புவதற்கான சட்டம் இடம் கொடுத்துள்ளதோ, அதே தொனியில் பல்வேறுவகையான வளங்களைத் தம்மகத்தே கொண்டுள்ள இப் புலம் பெயர் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் தேசத்தின் ஓரங்கம் என்பதனை என்றும் நாம் கவனத்திற் கொண்டிருக்க வேண்டும். இது நம் தேசத்துக்கு உற்சாகத்தையும் பலத்தையும் தரும்.

இன்றைய மாவீரர் நாளில் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்பதனை நாம் சிந்தனையிற் கொள்ள வேண்டும். இத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தில் தாயகத் தமிழ் மக்கள், புலர்பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாடு மக்கள், உலகத் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாக இருக்கும்.

அன்பான மக்களே,

2020 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் பரந்துபட்ட பங்களிப்புடன் எமது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். மாவீரர் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கான எமது முயற்சியில் உலகச் சூழலைக் கையாள்வது தொடர்பான அனைத்துலக உறவுக் கொள்கையினை மேலும் செழுமைப்படுத்த விரும்புகிறோம். இம் முயற்சியில் மக்கள் பங்கு கொள்ளும் நடைமுறை பற்றிய விபரங்களை நாம் விரைவில் மக்களுக்கு அறியத் தருவோம்.

இவ் விடயம் குறித்து பின்வரும் குறிப்புகளை இன்றைய மாவீரர்நாளில் மக்களின் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

  1. .இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை அனைத்துலக மயப்பட்டுள்ள இன்றைய நிலையில், தமிழ் மக்களை சிங்களத்தின் இனஅழிப்பிலிருந்து பாதுகாக்கும் பரிகாரநீதியின் அடிப்படையிலும், ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற தகைமை நிலையில் தமது அரசியல் தலைவிதியினைத் தாமே தீர்மானிக்கும் உரிமையினைக் கொண்டவர்கள் என்ற வகையிலும் – தமிழீழத் தனியரசினை அமைப்பதற்கான தேவையும் உரித்தும் கொண்டவர்கள் என்பதனை அனைத்துலக அரசுகள் உள்ளிட்ட அனைத்துலக சமூகம் ஏற்றக்கொள்ள வைப்;பதற்கான மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்களை மேலும் செழுமைப்படுத்தல்.
  2. தமிழீழத்தினை அமைப்பதற்கு புவிசார் அரசியல், பூகோள அரசியல் தரும் வாய்ப்புகளையும் இடையூறுகளையும் துல்லியமாக ஆய்வறிந்து அவற்றைக் கையாள்வதற்குரிய மார்க்கங்களை அடையாளம் காணல்.
  3. இலங்கைத்தீவு தொடர்பான அனைத்துலக முடிவுகள் எடுக்கப்படும்போது தமிழ்மக்கள் தவிர்க்க முடியாதவொரு ஒரு தரப்பாக நிலைநிறுத்துப்படும் நிலையை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து கவனம் கொள்ள வேண்டும். இலங்கைத்தீவில் தமிழர் பிரதேசத்தின்; கேந்திர முக்கியத்துவம், தமிழ் மக்களின் வியூக முக்கியத்துவம், ஈழத் தாயகத் தமிழர், புலம்பெயர் தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர், உலகத் தமிழர் ஆகியோரது இணைவினதும் திரட்சியினதும் வழியாக வரக்கூடிய வலிமையும் – அனைத்துலக உறவுகளில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கமும் குறித்து கவனம்; கொள்ளல்.
  4. பனிப்போர் காலத்துக்கு பின் பின்னரான ( post – post cold war – 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னான காலம்) இன்றைய உலக அரசியலில் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பது ஒற்றைத் தட்டு (layer) கொண்டதாக இல்லை. அவை பல்வேறு தட்டுக்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. நாம் உலக அரசுகளோடு உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு தட்டுக்களைக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுதல்.
  5. தற்போதய உலக ஒழுங்கில் நாடுகளுக்கிடையே தனியே உடன்பாடுகளோ அல்லது தனியே முரண்பாடுகள் மட்டுமோ காணப்படுவதில்லை. நாடுகளிடையே உடன்பாடுகளும் முரண்பாடுகளும் வௌ;வேறு விடயங்களில் ஒரே நேரத்திலேயே எழுகின்றன. கையாளப்படுகின்றன. இதனால் தற்போதய உலக ஒழுங்கில் அரசுகளுக்கிடையேயான உறவுகள் ஒரே நேரத்தில் உடன்பாடுகளும் முரண்பாடுகளும் ( Conflict & co-operation) இணைந்த வகையிலே அமைந்திருக்கின்றன. தற்போதய உலக ஒழுங்கில் அரசுகள் இயங்கும் முறையில் தமிழீழ அரசை அமைக்கும் எமது முயற்சிக்கான ஆதரவை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என்பதைக் கவனத்திற் கொள்ளல்

மேற்குறிப்பிட்ட விடயங்களிலும் இவற்றோடு தொடர்புபட்ட ஏனைய விடயங்களிலும் மக்களுடனான உரையாடலை நாம் விரைவில் மேற்கொள்வோம். எமது அனைத்து செயற்பாடுகளும் மாவீரர் கனவுகளை நனவாக்குவதற்கு உறுதுணை செய்யுமென நம்புகிறோம்.

அன்பானவர்களே,

தாயகத்தில் இராணுவ அழுத்தத்தின் மத்தியிலும் நமது மாவீரர்களை மக்கள் எழுச்சியுடன் நினைவுகூருகிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் உற்சாகத்தைத் தருகிறது. மாவீரர் துயிலுமில்லமெல்லாம் உயிர்த்தெழுந்திருக்கின்றன. எந்த ஆட்சியாளர்கள் மாவீரர் துயிலுமில்லம் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்தார் களோ, அவர்கள் முன்னிலையிலேயே, அவர்களால் தகர்க்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களுக்குள் எமது மக்கள் மாவீரர்களை நினைவு கூர்கிறார்கள். இது காலம் உலகுக்குக் கூறும் செய்தியாக அமைகிறது.

இன்றைய நாளில் மாவீரர்களின் பெற்றோர், பிள்ளைகள், கணவன்-மனைவியர் போன்றோரது தோள்களை நாம் தோழமையுடன் தழுவிக் கொள்கிறோம். உறவுகளே, கலங்காதீர். உம்மவர் செய்த ஈகம் நமது தேசத்தைப் பாதுகாத்து நிற்கிறது. நமக்கென்ற நாட்டை உருவாக்கும் சத்திய வலுவை எம் தேசத்துக்கு மாவீரர் வழங்குவார்கள்.

மாவீரர் கனவுகள் நனவாகும்வரை நாம் ஓயமாட்டோம் என இன்றைய மாவீரர் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழர் தலைவிதி தமிழர் கையில்!
தமிழரின் தாகம் தமிழீத் தாயகம்!

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தியில் தெரவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply