வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலோ தேவி நேதம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் நேற்று கொண்டகானில் உள்ள தனது கிராமத்திற்கு சென்றார்.
கிராமத்தில் தற்போது நெல் நாற்று நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டில் இருந்து நேராக வயலுக்குச் சென்ற பூலோ தேவி நேதம், வயலில் இறங்கி சிறிது நாற்று நடவு செய்தார். இது விவசாய தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
இதுபற்றி பூலோ தேவி நேதம் கூறுகையில், ‘நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள். இங்கே வேலை செய்வது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கொலோனா காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். எனவே, நாங்கள் சொந்தமாக பயிரிடுகிறோம். எங்கள் சொந்த வேலையைச் செய்வதில் அவமானம் இல்லை. அதிக பணிகள் இருந்தபோதிலும், நான் இரண்டு மூன்று முறை இங்கு வந்துள்ளேன். இங்கு வேலை செய்வது எனக்கு நிம்மதியை அளிக்கிறது’ என்றார்.
அவர் நாற்று நடவு செய்தபோது எடுத்த புகைப்படத்தை சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவரை பாராட்டியுள்ளார்.
‘காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேதமின் இந்த புகைப்படம், நிலத்தின் மதிப்புகளுடன் தொடர்புடைய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதைக் காட்டுகிறது’ என மந்திரி கூறி உள்ளார்.







