லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
Spread the love

லெப்ரினன்ட் புகழினி 24 ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,வீரவணக்கங்கள் பேணி(புகழினி)என்றும் உன் நினைவுகளுடன்
லெப்ரினன்ட் புகழினி

யார் இந்த புகழினி


புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லுத் தெரியச் சிரிக்கும் கள்ளமில்லா வெண்சிரிப்பும் கல கல என்று எந்த நேரமும் வாயோயாமல் அலட்டும் வெகுளித்தனமான பேச்சும்.

கட்டைக் காலை வைத்துக்கொண்டு பாதத்தால் ஈருளியின் மிதிகட்டையை தொடமுடியாமல் அவதிப்பட்டு தெண்டித் தெண்டி ஈருருளி ஓட்டும் அழகு தான்.

அவளிடம் அணியும் ஆடை, செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,
எந்த நேரமும் “அயர்ன் ” பண்ணி (ironing) மடிப்புக் கலையாத ஆடைதான் அணிவாள்.

எந்த வேலையென்றாலும் நாளைக்கு செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.

எங்களின் நாவற் பழ நிறத்தழகி அவள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அவள் சராசரி உயரத்தை விட சற்று குறைவான குள்ளமான உருவத்தை உடையவள். இதனால் அவள் பல சிரமங்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

இவளது அழகிய சிறிய குடும்பம்

எடுத்துக்காட்டாக,சைக்கிள் ஓட்டுவதற்கு கூட எதாவது ஒரு உயரமான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.

இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள்
எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.

அம்மா, அப்பா, தம்பி, அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது. அவளது சொந்தப்பெயர் மேரி கொன்ஸ்ரலின். வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.

அவளது சொந்த இடம் யாழ்,வலிகாமப்பகுதியில் சில்லாலை என்ற கிராமம். அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.

வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதான் காரணத்தால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தி

1994 ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாள்.


1995 ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்சநிலையை அடைந்திருந்தது.

வலிகாமப்பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை வன்கவர முன்னேறி வந்துகொண்டிருந்த போது எமது போராட்டத்தின்உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.

அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக்கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்…

இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்…

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்” என்று 1995 ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.

அங்கு அவள் மகளிரணியின் 30 வது பயிற்சிப் பாசறையில் புகழினி பெயருடன் போராளியாகப் புடம் போடப்பட்டாள்.


பின்பு 1995ம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.

கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம்

புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து,பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற்கொண்டாள்.

அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதே வேளை தேவைப்படும்போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.

அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக்கொண்டாள்.

தற்காப்புக் கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி


தற்காப்புக்கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றாள். அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம் (break dance) ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.

எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் (முறிப்பு ) நடனமாடி அவள்தான் கதாநாயகியாக திகழ்வாள்.

மேலும் அவள்
வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.

இயக்கத்துக்கு வரும் போது

இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு ஈருருளி கூட ஓட்டத்தெரியாது. ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக்கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது.


1996 ம் ஆண்டு ஆரம்பகாலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது .

பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.

அவளது நினைவாக

அதில் சிலவற்றை அவளது நினைவாகப் பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன்.


1996 ம் ஆண்டு வன்னிக்கு வன்னிக்கு வந்த புதிதில் எங்களுக்கு பணிக்கு செல்வதற்கு ஈருருளி கூட இல்லை.நானும் புகழினியும் ஈருருளி இல்லாத காரணத்தினால் நடராசாவில் (நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.

எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழமை.

புகழினிக்கு (பேணி) தான் பட்டப்பெயர். (எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப்பெயர் உருவானது) என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பின்பு பணிக்கு செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு ஈருருளி என்று கொடுக்கப்பட்டது.

அதில் நானும் பேணியும் (புகழினி) தான் ஒன்றாகப் பணிக்குச் செல்வோம். வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் மருத்துவ மனைக்குச் செல்வேன்.

மதிய நேர உணவு இடைவேளை


நாங்கள் பணிமுடித்துவிட்டு மதிய நேர உணவு இடைவேளைக்கு முகாமில் சென்று தான் சாப்பிடுவோம்.

அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவுற சோம்பலில் நானும் புகழினியும் ஒரு தட்டில் தான் உணவு உண்போம்.

சாப்பிட்ட தட்டைக் கழுவோனும் என்ற கள்ளத்தில் நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளிவிட்டு ஓடி விடுவேன்.

அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப்போட்டு வருவாள்.

அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலேயே எனக்கு பெரியதொரு மகிழ்வு இருக்கும் .


1997 ம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகமை கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப்பட்டோம்.

எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள். அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச மனப்பாங்கும், இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள்.

அதனாலேயே அவளை எந்த நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுதுபோக்கு.

பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை


உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

எங்கள் முகாம் முற்றத்தில் பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.

அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தொலைவு வரைக்கும் என்ன நடந்தாலும் பார்க்க முடியும்.

அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து படிக்கிறம் என்று கதைவிட்டு மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து விடுப்பு பார்த்துக்கொண்டு படிப்பதுண்டு.

புகழினிக்கு மாமரத்திலேயே எங்களோடு சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க விருப்பம்… ஆனால் ஏறத்தெரியாது.

அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளிவிட்டு ஒரு மாதிரி ஏற்றிப்போடுவோம்.


மேலே இருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில் இருக்கிற மாம்பிஞ்சுகளால வீதியால் உந்துருளியில் பயணிக்கின்ற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.

அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று வீட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.


ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்குப் பார்த்து எறியத் தெரியாது. இப்படித் தான் ஒரு தடவை அவள் ஒரு உந்துருளிக்கு மாம்பிஞ்சால ஏறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால ஈருருளியில் வந்த அப்பு மேல பட்டு

அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால ஏறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நாலுபேரும் நூறு தோப்புக்கரணம் போட்டதை இப்பவும் மறக்கமுடியாது.

கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்


புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம். நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.

எங்களது முகாமிலிருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும்போது சாப்பிடுவதற்கு நிறைய உலருணவுப் பொருட்கள் கொண்டுவந்து தருவதுண்டு.

அதை தமா அன்ரா தான் (ஒரு அக்காவின் பட்டப்பெயர்தான் தமா அன்ரா) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்.

அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.

அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது. மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.

தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.

புகழினியை இதுக்குக் கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்,

சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது

சாப்பிட்டால் பிறகு தமா அன்ரா விடம் பேச்சு/கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு (எங்களுக்கு எவ்வளவு பேச்சு/ கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது)
எங்களது முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரங்கள் உண்டு.

அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில்தான் இருக்கிறவர்.

அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழங்கள் காய்ந்திருக்கிறது என்று கண்காணிச்சுக்கொண்டு தான் இருப்பார்.

பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்

எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும். ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவி விட்டு அந்தப் பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சுவைப்பது உண்டு.

இந்தப் பலாப்பழம் பறிக்கின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட நேரக் காவற்கடமை நேரத்தில் தான் நிகழும்.


மற்றக் குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில் இருக்கிற விருப்பத்தில் இதுக்கு மட்டும் எங்களோடு கூட்டுச் சேருவாள்.

பலாப்பழம் ஏறிப் பறிக்கவோ வெட்டவோ வரமாட்டாள். நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுச் களவாணிகளை (முகாமில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்தப் நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…

பல விசுவாசக் குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற பயம்) உறக்கத்தில் இருந்து எழுப்பிக் கூட்டிக் வந்து அவர்களுக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.


இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டுப் பலாச் சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால் பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தகார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து

பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை

அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பின கதையை இப்பவும் எங்களால மறக்க முடியாது.

(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விடயங்களில் எங்களுக்குத் தண்டனை தருவதில்லை) இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.


புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.

அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது
சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.

வன்னி இடம் பெயர்வு

பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவுக்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குத் கூட அவதிப்பட்டார்கள்.

புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததால் அவளது பிரிவினையைத் தாங்க முடியாமல் கவலைப்பட்டு இருதய நோய் மற்றும் சுவாச நோய் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றார்.

அப்பா தான் ஓலைப்பாய், பெட்டி இழைத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். புகழினியின் தம்பியோ மிகவும் இளையவன்.

அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தான். இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்கு செல்லும்போது புகலினியின் அம்மா “என்ர மகள் வீட்ட இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களின் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.

ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு தேவை தானே. உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே” என்று சொல்லிச் சிரித்துச் சமாளித்து விடுவாள்.


புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.

இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக (album) சேகரித்து வைத்து இருந்தாள்.

சில போராளிகள் வீட்டில் “அம்மாவாணை” என்று சத்தியம் செய்வது போல இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

அது புகழினிக்குப் பிடிக்காது. சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதீங்கோ என்பாள்.


எங்களின் பொறுப்பாளார் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவளைப் போர்க்களங்களுக்கு அனுப்புவதில்லை.

1999 ம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப்பகுதிக்கு போர்க்களத்துக்கு சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்க வில்லை.

ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து பொறுப்பாளரோடு சண்டை பிடித்து சண்டைக்களத்துக்கு சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினாள்.


பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக விழுப்புண்ணடைந்து மாற்றுத்திறனாளிகளானோர்

நிருவாக நடவடிக்கை

மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்கு மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.


எங்களுக்கும் களப்பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப்பணிகளுக்குச் சென்று வருவோம்.

எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிநிருவாக்கப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.


அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச்சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்
பயிற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தோம்.

பளை போர் முன்னரங்ககப் பகுதி

அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபடியால் அவர்களுடன் இணைந்து பளை போர் முன்னரங்ககப் பகுதியில் எம் மக்களின் காவற் தெய்வமாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள்.


29.05.2000 அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம்” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.

எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம். பளைப்பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது

எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.


பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி பெற்று புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்கு சென்றோம்.

எங்கள் புகழினியின் வித்துடல்

அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.

அதை விட புகழினியின் அப்பா என்னைப்பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ர மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய்

என்ரை மகள் எங்கே” என்று என்னைக் கட்டிப்பிடித்து கதறி அழுத்ததும் நானும் குற்றஉணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.

பின்பு 2002 ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் மருத்துவ மனையில் நான் கணக்காய்வு பணியை மேற்கொண்டிருந்தபோது

என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்துக்கு (சில்லாலைக்கு) செல்லப்போகிறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப்போகிறேன்” என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.


எங்களின் அன்புத் தோழி புகழினியே…

உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க என் நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.

உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள், தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன்

நடைபிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் பிணமாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுதும் நீ என்னை “அ ரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன்கதை எழுதி வைக்கப்படும்.
வரலாற்று பதிப்பு போராளி எழுத்தாளர் -நிலாதமிழ்.