
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று
பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.
கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு
செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!
செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து
சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?
காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த
ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..
கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து
மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.
வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து
சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?
கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க
உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.
வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க
செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗
-பிறேமா(எழில்)-19-05-2024