கறுப்பு நாள் …

Spread the love

கறுப்பு நாள் …

நிலம் பிடித்து குழியெடுத்து
நீண்டு போரு செய்தாய் …
நிலம் பிடித்த படம் பிடித்து
நிகழ்ச்சிகளை செய்தாய் …

அடம் பிடித்து அபகரித்து
ஆக்கினைகள் தந்தாய் …
அகதியாக்கி அவர் விரட்டி
ஆடி நன்று மகிழ்ந்தாய் ….

படை திரட்டி போரெடுத்து
பாதகங்கள் செய்தாய் ….
பாவியராம் தமிழ் அழித்து
பாடி தானே நின்றாய் …..

உயிர் குடித்த வெறியடங்கா
உயிர் நின்ற உடல் தின்றாய் ..
உலகம் எல்லாம் உனை இழிக்க
உன் வதைகள் பகர்ந்தாய் ….

புத்தன் அவன் தர்மத்தை
புத்தியில காணோம் ….
யுத்த முனை புத்தகத்தை
யுத்தியிலே கண்டோம் ….

இலங்கையது ஒரு நாடு
என்று தானே சொன்னோம் ….
இல்லை என்றால் இரு நாடு
என்று தானே பகிர்ந்தோம் …

கொன்று விட்டு வாசல் வந்து
கொடு வாக்கு என்றால் …
தந்திடவா போகிறார்கள்
தமிழர் தானே சொல்லு …?

ஒரு மதமே உன் மதமே
உலகில் முதல் என்றால் …
உலக மகா சாந்தியினை
உலகில் எங்கே காண்பாய் …?

இன்று உந்தன் இனம் மகிழும்
இலங்கை ஒரு நாடாம் …?
இனிமையான சுதந்திரத்து
இன்ப பொங்கல் நாளாம் …..

அடிமையாகி வாழும் தமிழ்
அவர் கறுப்பு நாளாம் ….
அகில தமிழ் உனை வெறுக்கும்
அகம் இழந்த நாளாம் ……

இனம் அழித்த உன்னுடனே
இன்று தமிழ் வாழுமோ ..?
இனி வரும் காலமதில்
இணைந்து கூடி ஆளுமா …?

வன்னி மைந்தன்
ஆக்கம் -02-02-2020

கறுப்பு நாள்
கறுப்பு நாள்

Spread the love