ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்
Spread the love

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

கற்றைக் கருங்குழலும் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும்
கொண்டிருந்தும்
அற்றை ஈழத்தாய் அருந்துயர்
நீக்கவென்று
மற்றைக் கிசையாமல் மறவர் ஆனவர்கள் !

எற்றைக் கெம் நிலை ஏற்றம் உறும் என
அற்றைக் கேங்கி நின்ற எம் மக்களைக் காக்க
ஒற்றைத் தலைவனாய் நின்ற
எம் தலை வனின்
நற்றைப் பெருமை முழுமையும்
உணர்ந்து தோள் கொடுத்தவர்கள்!

ஈழத்துப் பெண்களின் வீரத்து நினைவுகள்

வல்லடிமை புரிந்த சிங்களத்தின்
மல்லடிமைச் சேற்றில் புதையாமல்
இல்லறத்தைத் தான் ஒதுக்கி
இளம் பருவச் சீரொதுக்கி
வல்ல மற நெஞ்சை வளையாத இரும்பாக்கி
ஒல்லைப் பெரும் போர் புரிந்து
எல்லை காத்து நின்றவர்கள் !

வெம் பகைவர் காலில் தலை தெறித்தோட
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப்படுத்தி
காலை முதற் கொண்டு கவின் மாலைப் பொழுது வரை
காவலரணில் சற்றும் விழி
சோர்தல் இல்லாது
வியன் றமிழ் ஈழத்தைக் காவல் செய்தவர்கள்!

கருமை சூழ்ந்த கங்குல்கள் ஒவ்வொன்றும்
புலரட்டும்
இவர்கள் நினைவோடு
மலரட்டும்
இவர்கள் கனவோடு
ஊனுருக உயிருருக உள்ளொளி பெருக அவர்கள் நினைவைக் கருக்கொண்டு
அவர்கள் கனவை நிறைவேற்றுவோம்!

-நிலாதமிழ்.