அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
Spread the love

அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

இரவல் வாங்கி ஓடிய காலம்
இரவு பகலா இதே மோகம். அதில்
இடையால நுழைந்து ஓடிய யோகம்
இனிக்கிடைக்காது இந்தப் போகம்.

கிரவல் வீதிகளாய் கிடந்த நேரம்
கிபிர்போல் பறந்துபோன வேகம்.
பரவல் மண்ணும் உரஞ்சிய காலம்
பட்டுமாறியதே எத்தனை காயம்.

இருமல் தடிமன் வந்தபோதும்
இருந்து ஆறாமல் குதித்த காலம்.
குருமன் குஞ்சுகள் ஓடுவதைப் பார்த்து
குடும்பமே ரசித்த அழகிய காலம்.

பிளசர்கள் பல்சர்கள் பிறக்காத காலம்
பெரிதா வசதிகள் சிறக்காத காலம்.
இளசுகள் பெரிசுகள் இருந்துகதைக்க
எடுத்துக்கொண்டு மெதுவா ஓடியகாலம்.

கைப்பேசி கணனி காணாத காலம்.
கண்முன் தெரியாப் போகாத காலம்.
அப்பாச்சி அக்ரிவா அறியாத காலம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்.

-பிறேமா(எழில்)-