விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை- பொலிசார் குவிப்பு

Spread the love

விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு….. விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை

ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மண்டி’ விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி சீதாலட்சுமி, துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ், காளிபாண்டியன், மண்டலத் தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், செந்தில் முருகன், எம்.பி. ரமேஷ், கோயம்பேடு ஜி.டி.ராஜசேகர், சீனிபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்

அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

முற்றுகை போராட்டத்தின் போது கொளத்தூர் ரவி கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும்.

மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply