காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்

Spread the love

காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்

2016 ஆம் ஆண்டு இலக்கம் 17 கீழான காணாமற்போனோர் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெறுகிறது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுரப்பட்ட பின்னர் 2009 ஆண்டுக்குப்பின்னர் காணாமற்போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழுவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தவொரு முறைப்பாடு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைப்பாடுகளை ஆராய்வதற்குத் தீர்மானித்தது.

இதற்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைவாக, நீதி அமைச்சர் அலி சப்ரியின் பங்கேற்பில் வடமாகாணத்தில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும்,; நடமாடும் சேவைகள் மூலம் மக்களைத் தெளிவூட்டுவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக வடமாகாணத்தை தெரிவு செய்து தீர்வு வழங்க முன்வந்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட அவர் காணாமல் போனோர் உட்பட ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

நீதியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு என்ற இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் இன்று 27 ஆரம்பமாகவுள்ளது.

நடமாடும் சேவை நாளை வரை இங்கு நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தனது பிரச்சினைகளை இங்கு முன்வைக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய மகா வித்தியாலத்திலும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

இதில் சட்ட உதவி ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபை, கடன் சபைகள் திணைக்களம், சமுதாய சார் சீர் திருத்த திணைக்களம் ,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயக பணியகம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், மாகாண காணிகள் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு, தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவகங்களின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    Leave a Reply