இன்றே மன்னித்து விடு

Spread the love

இன்றே மன்னித்து விடு

வாயோடு வாய் வைத்து
வந்து வழி பேசி நின்றேன்
நீயுரைத்த மொழி கேட்டு
நீர் விழியோடு யான் தவித்தேன்

ஆறாத என் மொழிகள்
ஆறாண்டாய் வாட்டியதோ …?
சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
சூட்டோடே சொல்லி விடு

வார்த்தையால் உனை கொன்று
வாழ்வதென்ன வாழ்வோ …?
வளர் பிறையின் முழு நிலவே
வாழும் போதே புரிந்து விடு

திட்டமிட்டு வாயில் வந்து
திட்டுவது யான் அல்ல
திட்டங்களை மூழ்கடிக்க
திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்

உச்சி முதல் உள்ளம் வரை
உயிரே வலிக்குதடி
பகுத்தறிவை படித்து வைத்து
பக்குவத்தை நட்ட பின்னர்

உன்னை வசை பாட
உயிரே நான் நினைத்ததில்லை
என் உயிலில் மாற்றமதை
எண்ணுறவே கண்டு விடு

எட்டாண்டு உயிர் வாழும்
என் உடலோ புரிந்து விடு
இறக்கும் முன்னர் ஒரு முறை
இன்றே மன்னித்து விடு

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply