புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு


புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில்

முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(13.08.2020) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த

காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் சரியான வரவேற்புக் கிடைத்திருக்கவில்லை.

இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர்.

ஆனால் தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், அற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள்

எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும்

புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில்

மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

அமைச்சர் என்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள்

தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை

விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய எதிர்பார்ப்புடன் குறித்த அமைச்சினை

வழங்கியுள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையையும் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஒரு அரசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான்

, தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை

பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல்

மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையிலுல் தென்னிலங்கை

கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தன்னிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்

அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.