இனி என்ன செய்வாய் ..?

இனி என்ன

இனி என்ன செய்வாய் ..?

பாயும் புலியாய் படை எடு
பகைவன் நடுங்க உருவெடு
அனலது கொதிப்பை நீ கொடு
அகிலம் வியக்க உயிர்ப்பெடு

பொத்துவில் முதல் பொலிகண்டி
பொங்கின தமிழ் தொடர்வண்டி
எவரடா கண்டார் இவ்வண்டி
எழுந்தே ஓடும் தொடர்வண்டி

சரிதம் எழுதிட எழுகிறார்
சரித்திரம் படித்தே வெடிக்கிறார்
வேரை அறுத்ததாய் நினைத்தவர்
வெகுயென எழுச்சியில் துடிக்கிறார்

குருதி குடித்தவன் ஆள்வதோ
குண்டு வெடித்தவன் சிரிப்பதோ
மாண்டவர் கனவு மாள்வதோ
மடையனாய் தமிழன் வாழ்வதோ

கொன்றவன் ஆட்சியில் விடுதலை
கொடி நாட்டு உலகில் முன்னிலை
இனமது அழித்தால் இதுவரும்
இனியெனும் உணரட்டும் சிங்களம்

வன்னி மைந்தன்
ஆக்கம் 08-02-2021
பொத்துவில் முதல் பொலிகண்டி
வரலாற்று பேர் எழுச்சி கண்டு

Spread the love