ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி தாக்கு

நாராயணசாமி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி தாக்கு

எல்லாவற்றையும் பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார் – நாராயணசாமி கடும் தாக்கு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தொடர் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில், அதாவது 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடந்துள்ளது.

கடந்த 9 மாதமாக வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை. அவர் அம்பானி, அதானியின் நலனைப் பார்க்கிறார். விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

முதலமைச்சர் ரங்கசாமி

கொரோனா காரணமாக 20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

இதையெல்லாம் எதிர்த்து புதுவையில் ஞாயிற்றுக்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. புதுவையில் பா.ஜ.க.வின் பினாமி அரசான என்.ஆர்.காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் ரங்கசாமி எல்லாவற்றையும் பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு அடிமை ஆட்சி நடத்துகிறார். மத்திய அரசின் திட்டங்களை முன்பு எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது அதை ஆதரிக்கும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்துள்ள அவர்கள் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறார்கள் என தெரிவித்தார்.

Author: நிருபர் காவலன்