சவால்களுக்கு தீர்வுகாண ஒன்றாகச் செயற்படுவோம்-கோட்டாபய

கோட்டாவின் புலிக் கட்சி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சவால்களுக்கு தீர்வுகாண ஒன்றாகச் செயற்படுவோம்-கோட்டாபய

உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று தெரிவித்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயற்படுவது அவசியமெனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் உணவுத் திட்ட மாநாட்டில், இணையவழியூடாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால், இந்த உணவுத் திட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் 17ஐ அடைவது தொடர்பில், உலக உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பில், முக்கியமான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொவிட் தொற்றுப் பரவலானது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையானது, காலநிலை மாற்றங்கள் காரணமாக மேலும் மோசமான நிலைமைக்குத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

நிலையான உணவுக் கட்டமைப்பானது, இலங்கையின் வளமான சமூகக் கலாசாரம் மற்றும் பாரம்பரியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.

மனிதச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை
ஏற்படுத்தும் இரசாயனப் பசளை, களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தடை செய்ய தனது அரசாங்கம் அண்மையில் எடுத்தத் தீர்மானமானது, நிலையான அபிவிருத்தி தொடர்பான அரச கொள்கையொன்றில் காணப்படும் பிரதான மைல்கல்லாகும் என்று, ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

நீண்ட காலமாக இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகளின் மனநிலைகளை மாற்றுவது கடினமாகியுள்ளதென்றும் சேதனப் பசளையைத் தேவையானளவு உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்துகொள்வது சவாலானதாக அமைந்திருக்கின்றது என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி, இது தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை, இலங்கை அன்புடன் வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிக்கும் போது, கிராமிய வறுமையைக் குறைக்கும் வகையில் சந்தைகளை இலக்கு வைக்கும் உணவுச் சங்கிலியை மேம்படுத்தும் தேவை காணப்படுவதோடு, இலங்கையின் உணவுக் கட்டமைப்பை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியுமென்று, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்புகள் மற்றும் உலக உணவு வேலைத்திட்டத்தினால் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் தொழில்நுட்ப உதவியைப் பாராட்டிய ஜனாதிபதி, ஏனைய உலகளாவிய அமைப்புகள் மற்றும் அறிவியல் ரீதியிலான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

தன்னுடைய நாட்டின் பிரஜைகள் மற்றும் உலகத்துக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதியளித்தல், அனைத்து உலகத் தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இது விடயத்தில் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென்றுத் தெரிவித்தார்.

மனிதர்களைப் போன்றே இந்தப் பூமியின் சுகாதார நலனுக்கான போஷாக்கை வழங்கக்கூடிய வகையில், உலகளாவிய உணவுக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு, இந்த ஐ.நா உணவுத்திட்ட மாநாடு வழிசமைக்குமென, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்

Author: நிருபர் காவலன்