கண்ணீர் அஞ்சலி ….!

கண்ணீர் அஞ்சலி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கண்ணீர் அஞ்சலி ….!

ஆறாத் துயரில் மீளா எம்மை
ஆற்றிட வருவாயா ..?
அறத்தை நாட்டி எழுந்த பூவே
ஆறுதல் கூறாயா …?

விடயம் அறிந்தே கதறும் விழிகள்
விழிகள் பாராயா ..?
விடலை உன்னை தின்ற கொரனோ
இன்று சாகாதா

ஒன்றாய் படித்த நாட்களது
ஓடுது விழியுள்ளே – நீ
ஒடித்து தந்த மாங்காய் துளிகள்
இனிக்குது நாவினிலே

நேற்று வீழ்ந்தாய் என்ற செய்தி
நெஞ்சை உடைத்ததுவே
நேசம் வைத்த மாணாக்கர்
நெஞ்சம் வேகிறதே

நாற்பத்தொன்று ஆகுமுன்னே
நரபலி எடுத்தானோ
நம்பி வணங்கும் ஆண்டவனும்
நலம் இன்றி போனானோ

ஊரும் கதற உறவும் கதற
உன் உடல் போகிறதே
ஊழி தீயும் உன் உடல் உண்ண
ஊர்வலம் நடக்கிறதே

எங்கள் தோழி உன்னை கொன்ற
எமனை சிறையிலிடு
எரியும் தணலில் அவனை தள்ளி
ஏ மனமே எரித்து விடு ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-02-2021
எம்மோடு கல்வி கற்ற மாணவி ,கனடாவில் …..மரணத் துயர் அறிந்த பொழுது …!

Author: நிருபர் காவலன்