இரணைமடு நீர்த்தேக்கத்தை பார்வையிட்டார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள்

கிளிநொச்சி இரணைமடுகுளத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே இன்று (05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் றெஜினோல்ட் கூரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.

நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் அதிகாரிகள், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது விவசாய பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த ஆளுநர் அவர்கள் 36 அடி நீரைத் தேக்கி பல்வகைப் பயிற்செய்கைகளை மேற்கொண்டு உச்ச வருவாயை ஈட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நீர்த்தேக்கம் பற்றியும் அதன் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் பற்றியும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் அவர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினார். அத்துடன் அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளும் மேலதிக விளக்கங்களை ஆளுநருக்கு வழங்கினார்கள்.

இரணைமடுகுளத்தின் கொள்ளளவு புனரமைப்புக்கு முன்னர் 34 அடியாக காணப்பட்டது. புனரமைப்பின் பின் 36 அடியாக காணப்படுகிறது. தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது. இந் நிலையில் குளத்தை பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள்

தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன். குளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. இது தொடர்பில் மாவட்ட செயலருடன் இணைந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

மேலும் 20 செய்திகள் கீழே