நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன்- போட்டு தாக்கும் சரத் பொன்சேகா

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்பெயரை விளித்து விமர்சித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால் இவ்வாறு கட்சித்தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதிபோல் செயற்பட்டிருக்கமாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாகமீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரியிருக்கமாட்டேன். தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன். வாரம் ஒருதடவை வெளிநாட்டுக்கு பயணம்செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை மகளின் பெயரில் வெளியிட்டிருக்கமாட்டேன்.

அதேவேளை, இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி பேசிவருகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும். இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சைபெற்றாலும் பரவாயில்லை. அதற்கு ஏற்றவகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் 20 செய்திகள் கீழே