வெட்கம் கெட்டவர் மஹிந்தர்! – சுமந்திரன்

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலமின்றி ஒருவர் பிரதமராக இருக்க முடியாது. எனவே, மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதே சம்பிரதாயமாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று தடவைகள் அவருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பட்ட போதும் அவர் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்கின்றார். இது வெட்கக்கேடு

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நேற்று மதியம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் குழு அறையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தன. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் மூலமான வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால், குரல் மூல வாக்கெடுப்புத் தீர்மானத்துக்கு மஹிந்த தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பதால் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாக இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறினோம். அதற்கு மஹிந்த தரப்பினர் இணங்கவில்லை. அவர்களுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.

”இந்நிலையில், பிரதமர் செயலாளரின் செலவீனங்களை இடைநிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இது எமது முதலாவது நடவடிக்கையாகும். இதனை எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்திற்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” – என்றார்.

மேலும் 20 செய்திகள் கீழே