யாழில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு-அல்லைப்பிட்டியில் கொடூரம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியில் உயிருக்காக போராடிய இளைஞனை வீதியால் பயணித்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அல்லைப்பிட்டிப் பகுதியில் உள்ள வாடி வீட்டிற்கு அண்மையில் ஓர் இளைஞன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரம் கானப்பட்டுள்ளார். குறித்த சமயம் வீதியால் பயணித்த ஓர் முச்சக்கர வண்டி சாரதி அதனை அவதானித்தபோதும் சட்டப் பிரச்சணையை எண்ணி அருகில் செல்ல அச்சமடைந்த நிலையில் வீதியில் காத்திருந்த சமயம் மேலும் ஓர் முச்சக்கர வண்டி வீதியால் பயணித்துள்ளது.

இதனையடுத்து இரு முச்சக்கர வண்டிச் சாரதிகளும் உடனடியாக 1990இலக்க அவசர நோயாளர் காவு சேவை இலக்கத்தை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டிமூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது சம்பவ இடத்தில் ஓர் ஈருருளி மற்றும் ஓரு சோடி பாட்டா என்பன அங்கே சிதறிய வண்ணம் இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் இவ்வாறு கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாததோடு இவ்வாறு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் 20 செய்திகள் கீழே