வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்றுவிட்டு தாலிக்கொடியை மீண்டும் கொண்டுவந்துபோட்ட யாழ்ப்பாண திருடர்கள்

வீடு புகுந்து கணவரை வெட்டிக்காயப்படுத்தி விட்டு, கொள்ளையடித்த நகைகளில் மனைவியின் தாலிக்கொடியை மாத்திரம் திரும்ப கொண்டு வந்து வீட்டு வளவிற்குள் போட்டுவிட்டு சென்றுள்ளனர் திருடர்கள். யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கொட்டடி சூரிபுரம் பகுதியில் கடந்த 9ம் திகதி அதிகாலை இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றது. ஓடுபிரித்து வீட்டுக்குள் நுழைந்தனர் மூன்று முகமூடி கொள்ளையர்கள். குடும்ப தலைவர் விழித்துக் கொண்டு அவர்களை தாக்க முயன்றார். ஆனால், கொள்ளையர்கள் அவரை மிருக்கத்தனமாக தாக்கி, கத்தியால் அவரை வெட்டினார்கள். இதில் அவர் படுகாயமடைந்தார்.

அவருடைய மனைவி அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்த திருடர்கள், வீட்டை சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வேறு நகைகளையும் எடுத்தனர். மொத்தமாக 18 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று வீட்டு வளவில் தாலிக்கொடி வீசப்பட்டிருந்தது. தாலிக்கொடியில் பொருத்தப்பட்டிருந்த காசுகள் இல்லாமல், தாலிக்கொடி மட்டுமே வீசப்பட்டிருந்தது. 11 பவுண் தாலிக்கொடியே கொள்ளையிடப்பட்டிருந்தது. நேற்று மீட்கப்பட்டது 7.8 பவுண் நிறையுடையது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் 20 செய்திகள் கீழே