பெருகப்போகும் இரத்த ஆறு; சாகும்வரையான தாக்குதலுக்கு தயாராகும் மைத்திரி

ஸ்ரீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அனைத்து அதிகாரங்களை தன்வசப்படுத்த முயற்சிப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை அடுத்து எழுந்துள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்க தன்னால் முடியும் என்றும் அதற்குத் தேவையான பல துரும்புச் சீட்டுக்கள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்த மைத்ரிபால சிறிசேன பொலிஸ் திணைக்களத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.

இந்த நிலையிலேயே மஹிந்தவுடன் இணைந்து உருவாக்கியுள்ள சட்டவிரோத அரசாங்கத்தை ஆட்சியில் தக்கவைத்துக்கொள்ள மைத்ரிபால பல சதித்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் சரத் விஜயசூரிய குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இங்கு விரிவான கருத்துக்களை வெளியிட அவர்,

“மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதை பல்வேறு தரப்பினர் தர்க்க ரீதியாக எடுத்துக்கூறியும் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து அரசியல் சாசனத்தினை மைத்திரிபால சிறிசேன மீறி வருகின்றார். 19ஆவது அரசியல் சாசன திருத்தச் சடடத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி எந்த அமைச்சு பொறுப்புகள் உரித்துடையவை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ஊடகத்துறை அமைச்சை கைப்பற்றியுள்ளார். அத்துடன் சட்ட, ஒழுங்கு அமைச்சையும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தன்வசப் படுத்தியிருக்கின்றார். இவ்வாறான நடவடிக்கைகள் அரசியலமைப்பு முற்றிலும் மீறியவையாகும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதும் சட்டம் ஒழுங்கு அமைச்சை கைப்பற்ற நினைப்பதும் தனக்கு தேவையான நபர்களை சில வழிமுறைகள் ஊடாக கட்டுப்படுத்துவதற்காகவே என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.” என்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நேற்றைய தினம் அழைத்திருந்த அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, தன்னிடம் இருந்த ஒரு துரும்புச் சீட்டையே தான் இதுவரை பயன்படுத்தி இருப்பதாகவும், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு தன்னிடம் மேலும் பல துரும்புச் சீட்டுகள் கைவசம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அது மாத்திரமன்றி நாடாளுமன்றம் 14 ஆம் திகதி கூடும் போது மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து தான் உருவாக்கியுள்ள புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குழப்பம் விளைவிக்காமல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திய மைத்ரிபால சிறிசேன, இதனை ஐக்கிய தேசியக் கட்சி செய்யத்தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தார்.

மைத்ரிபால சிறிசேனவின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில மணி நேரங்களில் பொலிஸ் திணைக்களத்தையும் அவர் தன் வசப்படுத்தியிருக்கின்றதன் மூலம், அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கைதுசெய்யப்படலாம் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜயசூரிய அச்சம் வெளியிட்டுள்ளார்.

“சில வேளைகளில் நாளை அல்லது அடுத்துவரும் நாட்களில் சில நபர்கள் ஆதாரமின்றி கைதுசெய்யப்படலாம். அவர்கள கைதுசெய்யப்பட்டமைக்கு இதுதான் காரணம் என, மைத்திரிபால தெரிவிக்கலாம். இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கை இரத்த வெள்ளத்தில்தான் முடியும். முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்று ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார். அதன்படி சாகும்வரையான தாக்குதலுக்கு அவர் தயாராகியுள்ளதாக தெரிகின்றது. நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுவதற்கு முன்னதாக அவர் அதிகாரங்களை கைப்பற்ற முனைகின்றார்.

இதனால் மைத்ரிபால சிறிசேனவின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆட்சியார்கள் தான்தோன்றித்தனமாக செயற்படமுடியாது. தனது தனிப்பட்ட நலனுக்காக மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்படுவது நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அரச தலைவரின் இவ்வாறான செயற்பாடு நாட்டை எந்தளவு பாதிக்கும் என்பதை எடுத்துகூற விரும்புகின்றோம். இரண்டு வாரங்களாக நாட்டின் ஆட்சி நடவடிக்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தனது காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும் 20 செய்திகள் கீழே