இலத்திரனியல் வாகனப்பதிவு தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலத்திரனியல் வாகனங்களைப் பதிவுசெய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் வாகனங்களைப் பதிவுசெய்வது அவசியமற்றது என சில தரப்பினர் தகவல்களைப் பரப்பிவருவதால் போக்குவரத்து பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நாம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பினோம்.

மின்சார அல்லது ஏதேனும் சக்தியின் உதவியுடன் பயணிக்கும் வாகனங்கள் பதிவுசெய்யப்படுவது அவசியம் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க இதுவரை, முழுமையாக இலத்திரனியல் சக்தியுடன் பயணிக்கும் 6,729 வாகனங்களும் மின்சாரம் மற்றும் டீசலில் பயணிக்கும் 528 வாகனங்களும் இலத்திரனியல் மற்றும் 1,55,471 பெற்றோல் வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Post