ஈரான் அதிபராக முன்னர் 2005 முதல் 2013 பொறுப்பு வகித்த மஹ்மவுத் அஹமடினெஜாட் கடந்த 2009- ஆண்டு எஸ்ஃபன்டியார் ரஹிம் மஷாயி என்பவரை துணை அதிபராக நியமித்தார்.

இந்த நியமனத்துக்கு அந்நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய மதத்தலைவரான அயாத்துல்லா அலி கமேனி அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இஸ்லாமிய மதத்தலைவர்களை சகட்டுமேனிக்கு எஸ்ஃபன்டியார் ரஹிம் மஷாயி முன்னர் தாக்கி பேசி வந்தார். இஸ்ரேலுடன் அவர்கள் நட்பு பாராட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.

எனினும், அஹமதினெஜாத்தின் மகன் ரஹிம் மஷாயியின் மகளை திருமணம் செய்திருந்ததால் அவர்மீது அப்போது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருந்தது.

கடந்த 2013- ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஈரானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக ரஹிம் மஷாயி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல், முன்னாள் அதிபரின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த அலி அக்பர் ஜவன்ஃபெக்ர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் இருவருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த குற்றத்துக்கு ஐந்தாண்டு, நாட்டைப் பற்றிய தவறான முறையில் பிரசாரம் செய்ததற்காக ஓராண்டு மற்றும் நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்கு 6 மாதங்கள் என முன்னாள் துணை அதிபர் எஸ்ஃபன்டியார் ரஹிம் மஷாயி-க்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் முன்னாள் அதிபரின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த அலி அக்பர் ஜவன்ஃபெக்ருக்கு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த குற்றத்துக்காக நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Related Post