ஶ்ரீலங்கன் விமான சேவையில் தரமற்ற உணவு – ஜனாதிபதி சாட்சி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஹம்பாந்தோட்டையில் நேற்று ஆற்றிய உரை, சர்வதேச விமான சேவைகளில் பரிமாறும் உணவு வகைகளின் தரம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாகம்புரவில் நேற்று இடம்பெற்ற விவசாய நிகழ்வொன்றின் போது, ஶ்ரீலங்கன் விமான சேவையில் தமக்கு தரமற்ற மனித பாவனைக்குதவாத மரமுந்திரிகை பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த தரமற்ற மரமுந்திரிகையை நாய்களுக்குக் கூட உணவாக வழங்கமுடியாது எனவும் இதன்போது ஜனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

தமது நேபாள விஜயத்தை முடித்துக் கொண்டு கத்மண்டுவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது விமானத்தில் தமக்கு மரமுந்திரிகை பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், இத்தகைய மனித பாவனைக்கு உதவாத உணவுகளை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியவர்கள் யார் எனவும், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வினவினார்.

ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஶ்ரீலங்கான் விமான சேவை நிறுவனத்தினால் இதுவரை எவ்வித விளக்கமும் வௌியிடப்படவில்லை.

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவன அண்மைக்காலமாக விமசர்னங்களையும், மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி வருவதுடன், தேசிய போக்குவரத்து சேவையில் இந்த நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், சர்வதேச விமான சேவைகளில் தரமற்ற மனிதப் பாவனைக்குதவாத மரமுந்திரிகை பரிமாறப்பட்டமை தொடர்பில் பதிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.

நான்கு வருடங்களுக்கு முன்னர் விமான சேவையின் பணிப்பெண்ணினால் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட மெகடமியா கொட்டைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவன உரிமையாளரான பெண், விமானப் பயணிகளின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் சில மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Post