அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவார் – தெளிவுபடுத்திய மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்குச் சென்ற அவர், அங்கு இந்தியாவின் முதன்மை செய்தித் தாள்களுள் ஒன்றான தி ஹிந்துவுக்கு அளித்த செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனும் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென கூறிய மகிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளருக்குரிய வயதினை நாமல் ராஜபக்‌ஷ இன்னும் எட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவும், குறித்த தேர்தலுக்கு பின்னரும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுடன் நல்ல உறவுகள் நிலவவில்லை என இந்த செவ்வியில் ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்‌ஷ, அது போன்ற நிலமைகளை கடந்து முன் செல்ல வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமக்கு எதிரான பொது வேட்பாளரை முன்னிறுத்துவதில் இந்திய உளவுப் பிரிவான ரோ செயற்பட்டதாக, மகிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டியிருந்தமை தொடர்பில், முன்வைக்கப்பட்ட கேள்விக்கும் இந்த செவ்வியின் போது அவர் பதிலளித்துள்ளார்.

இலங்கையின் தேர்தலில் தலையிட்டதாக தாம் இந்தியாவை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என தெரிவித்த அவர், எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் தேர்தலில் தலையிடக்கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரத்திற்காக சீனாவிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் விடயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்‌ஷ, தாம் சீனாவிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தன் மீது குற்றம் சாட்டுவதற்கு இதைத் தவிர தற்போதைய அரசாங்கத்திற்கு வேறு ஒரு விடயமும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தன்னிடம் இருப்பதாக சொல்லப்படும் 18 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தற்போதைய அரசாங்கம் தேட முற்பட்டதாகவும், இன்றுவரை தேடியும் அத்தகைய ஒரு அமெரிக்க டொலரைக்கூட தன்னிடம் இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து பெறப்பட்ட கடன்கள், இலங்கையால் திருப்பிச் செலுத்தக்கூடியவையாகவே இருந்ததாக கூறிய மகிந்த ராஜபக்‌ஷ தற்போதைய அரசாங்கம், அந்த சுமுகமான சூழ்நிலையை குழப்பியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அவரிடம் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்‌ஷ, அது இந்தியாவின் உள்நாட்டு விடயம் என்பதால் அது இந்தியாவாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமக்கு கருத்து எதுவும் இல்லை என தெரிவித்த மகிந்த ராஜபக்‌ஷ, எனினும், இது போன்ற ஒரு பிரச்சனை இலங்கையில் எழுந்திருந்தால், தாம் வேறு விதமாகவே முடிவெடுத்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Post