பரபரப்புக்கு மத்தியில் இன்று ஐயப்பன் கோவில் திறப்பு

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ன. குறிப்பாக இந்து அமைப்புகளைச் சோந்த பெண்கள் சாரை சாரையாக திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் பெண்கள், ஐப்பசி மாதம் நடை திறந்ததும் சபரிமலை செல்வதற்காக விரதம் தொடங்கினர். ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் எச்சரித்து வந்தனர். இதனால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இது ஒருபுறமிருக்க போராட்டக்குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அடிவார முகாம்களில் முகாமிட்டு கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர்.

குறிப்பாக நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவிலில் இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பெண்கள் அனைவரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், இன்று பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை

Related Post