கடனில் இருக்கும் மக்களை விடுவிக்க வவுனியாவில் புதிய திட்டம் நடைமுறை

வடமாகாணத்தில் நுண்நிதி நிறுவனங்களில் கூடுதலான வட்டிக்கு கடன்களைப் பெற்று மீள செலுத்த முடியாமல் கடன் சுமையில் இருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் அரசாங்கக்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் கடன் சுமையை நீக்கும் பொருட்டு குறைந்த வட்டி வீதத்தில் மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசங்கள், கூட்டுறவு கிராமிய வங்கிகள் ஊடாக கூட்டுறவு அரவணைப்பு கடன் திட்டம் வழங்கபட்டு வருகிறது.

குறித்த திட்டம் இலங்கை மத்திய வங்கி, மாவட்ட செயலகம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் மேற்பார்வையில் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இக் கடன் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் ஆரம்ப கட்டமாக சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்கள் மூலம் 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இச் சங்கங்களினூடாக கடன்களை வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சமாசத்தின் அலுவலக மண்டபத்தில் சமாசத்தின் தலைவர் அ.ச.பாரதி ஆனந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்நினராக வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி இந்திரா சுபசிங்க கலந்து கொண்டிருந்தார். அத்துடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.பிரணவன் மற்றும் சமாசத்தின் இயக்குனர்சபை உறுப்பினர்களும், பயனாளிகளும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமாசத்தின் தலைவர், இயக்குனர் சபை உறும்பினரகள் ஆகியோரினால் பயனளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மொத்தமாக 8 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் கீழே