தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ; அடுத்த சுற்றுப் பேச்சு இன்று

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சம்பள அதிகரிப்பு பற்றிய இணக்கப்பாட்டை எட்ட முடியாமல் போனதென தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சனையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்குக்கொண்டு வரப்போவதாக ராமநாதன் குறிப்பிட்டார்.

கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திட்ட உடன்படிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நிறைவடைகின்றது.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திரு.ராமநாதன் கூறினார்.

இந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்துடன் செவ்வாய்கிழமை இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 15 வீதமாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டமைக்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்காமையினால் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post