குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்டவர்கள் தாக்கப்படுவதற்கு உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.

எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

அங்கு வெளிமாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘வறுமையைப்போல் அதிபயங்கரமானது எதுவுமில்லை. குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதும், வேலையில்லா திண்டாட்டம் அங்கு பெருகி வருவதும்தான் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பெருகுவதற்கான மூலக்காரணம்.

இதற்காக, வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த கூலி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது முற்றிலும் தவறானது. இதைநான் வன்மையாக எதிர்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Post