தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும்-மனோ கணேசன்

Spread the love

தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும்

அமைச்சர் மனோ கணேசன்

இந்த தேர்தல் முரண்பாட்டு மாற்றத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு புலம் பெயர விரும்பும் சிறுகுழுக்கள் எப்போதும் போல் இருப்பார்கள். ஏற்கனவே புலம் பெயர்ந்து, வழக்காடி, இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராமல் இருக்க இதை பயன்படுத்த விரும்புவோரும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் இலங்கையை தாய்நாடாக கருதியவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் அப்படியே விரும்பட்டும். அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் தஞ்சமடையட்டும். ஆனால், தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே மிக பெரும்பாலான தமிழரும், முஸ்லிம்களும் வாழ வேண்டும். இந்த தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கி பிடித்துக்கொண்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர்களாகிய நாம், தொடர்ந்து வெவ்வேறு நாட்டவர் போன்று பயணிக்க முடியாது. இலங்கை எங்கள் தாய்நாடு. இந்நாட்டின் நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள் கல்வி கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியை தேடவும் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல்பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ இதில் கூறியுள்ளதாவது,

அரசியல் கட்சிகள் சொல்லியோ, சொல்லாமலோ, தமிழ், முஸ்லிம், இந்து, கத்தோலிக்க, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, ஒரு முனைப்பில், ஒரு செய்தியை சொல்லி, வடக்கு, மலையகம், கிழக்கு, மேற்கு, தெற்கு என நாடு முழுக்க வாக்களித்தார்கள்.

பெரும்பான்மையான சிங்கள பெளத்த மக்களும், வேறு முனைப்பில், இன்னொரு செய்தியை சொல்லி, வாக்களித்து விட்டார்கள்.

இந்நிலையில், சிங்கள பெளத்த மக்களின் வாக்களிப்பு பக்கத்தில் இருந்த ஒருசில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது நபர்கள், “நாங்கள் சொன்னோமே, கேட்டீங்களா” என்ற பாணியில் பேச முடியாது.

உண்மையில் இந்த வாக்களிப்பின் மூலம் உலகத்துக்கு, இந்த நாட்டின் புதிய ஆட்சியாளர்களுக்கு, ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. அந்த செய்தியை நமது நாட்டின் புதிய ஜனாதிபதி புரிந்துக்கொள்ள முயல்கிறார் என்பது, அந்த பக்கத்தில் இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை தாண்டி எமக்கு தெரிகிறது. இது உண்மையா, சரியா என்பதை அவகாசம் தந்து பார்ப்போம்.

நமது செய்தியை அவர்கள் புரிந்துக்கொள்வதை போன்று, சிங்கள மக்களின் செய்தியை நாமும் புரிந்துக்கொள்ள முயல வேண்டும்.

இந்த தேர்தல் முரண்பாட்டு மாற்றத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு புலம் பெயர விரும்பும் சிறுகுழுக்கள் எப்போதும் போல் இருப்பார்கள். ஏற்கனவே புலம் பெயர்ந்து, வழக்காடி, இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராமல் இருக்க இதை பயன்படுத்த விரும்புவோரும் இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் இலங்கையை தாய்நாடாக கருதியவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் அப்படியே விரும்பட்டும். இருக்கட்டும். அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் தஞ்சமடையட்டும்.

இதைவிட கஷ்டமான இருண்ட யுக மனித உரிமை சவால்களை இதே நாட்டில் நாம் சந்தித்து இருக்கிறோம். அதற்கு எதிரான மனித உரிமை போராட்டத்துக்கு சுமார் நான்கு வருடங்கள், நான் கொழும்பில் தலைமை தாங்கி இருக்கின்றேன்.

இனி அந்த இருண்ட யுகம் மீண்டும் வரும் என நான் நம்பவில்லை. நமது அரசின் மீது எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும், இந்நாட்டில் ஜனநாயக இடைவெளியை நாம் ஏற்படுத்தி விட்டோம். இனி இன்றைய உலக ஒழுங்கில், அது பின்னோக்கி நகர முடியாது.

தேர்தல் முடிவு சூட்டின் காரணமாக ஆங்காங்கே நடைபெறும் சில சம்பவங்கள் தொடர்பில் நாம் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை முடிவுக்கு வரும் என நம்புவோம்.

இந்நிலையில் இனியும் இந்த தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கி பிடித்துக்கொண்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர்களாகிய நாம், தொடர்ந்து வெவ்வேறு நாட்டவர் போன்று பயணிக்க முடியாது. இலங்கை எங்கள் தாய்நாடு.

இந்நாட்டின் நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள் கல்வி கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நம் காட்ட வேண்டும். அதன் பின்னர் நம்மில் பலர் மீண்டும் இங்கேயே பிறக்க விரும்பியே சாகவும் வேண்டும்.

இதைவிட சிறந்த ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை கனவு காண்பவர்கள் தொடர்ந்து கனவு காணட்டும். அந்த கனவுகளை நனவாக்க முயலட்டும். அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

நாம் மனந்தளராமல், இந்த சூழலில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து, இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ முயல்வோம். நாளைய நாளை, இன்றைய நாளைவிட நல்ல நாளாக அமைத்திட நாம் நடைமுறை நனவு வழியில் பாடுபடுவோம்.

நான் இங்கே “லைவ்வாக” நேரடியாக இருக்கிறேன். ஏனைய தமிழ்-முஸ்லிம் அரசியலர் எவரும் இப்படி நேரடியாக இருக்கிறார்களா என எனக்கு தெரியாது. ஆகவே இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்துகள் இருந்தால் இங்கே சொல்லுங்கள். இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமையட்டும்.

Leave a Reply