அவர் அப்டி பேசியது தவறு – குமுறும் மனோகணேசன்

Spread the love
அவர் அப்டி பேசியது தவறு – குமுறும் மனோகணேசன்

“அதாவுல்லா விவகாரம்”, தமிழ்-முஸ்லிம் பிரச்சினை அல்ல. அவர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக இதை கூறவில்லை. கூறவும் முடியாது. பெருந்தொகையான முஸ்லிம் சகோதரர்கள் நேரடியாகவும். பகிரங்கமாகவும் என்னிடம் வருத்தமும், அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்நாட்டில் இன ஒற்றுமைக்கு இந்த சம்பவம் குந்தகமாக அமைய கூடாது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இந்த மின்னல் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே நிதானம் இல்லாமலே நடந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அவரது நடத்தையை முதலில் இருந்தே பார்ப்பவர்களுக்கு இது புரிகிறது. (அது ஏன், என்ன…. என அவரிடம்தான் கேட்க வேண்டும்!). சக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கூட அவர் “அவன்-இவன்” என்ற ஏக வசனத்தில்தான் பேசினார். தோட்ட தொழிலாளர் பற்றியும், முதலிலேயே சில இடங்களில், “அவன்-இவன்” என்று குறிப்பிட்டபடி வந்தார். பொறுமையாக இருந்தேன்.

நிகழ்ச்சியில் பல நல்ல கருத்துகளையும் அவர் சொன்னார். பல இடங்களில் நடுநிலை தவறி, எல்லாவற்றுக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள்தான் காரணம் என்றும் கூறினார். ஆயுதம் தூக்கும்வரை தமிழ் இளைஞர் சென்றதன் பின்னணியில், பேரினவாதம் இருந்திருக்கின்றது என அவருக்கு புரிய வைக்க பல இடங்களில் நான் முயன்றேன்.

கடைசியில், அந்த “இழிச்சொல்லை” பயன்படுத்தி தோட்ட தொழிலாளர்களை விளித்தார். “அந்த சொல் பிழையானது. அதை வாபஸ் வாங்குங்கள்” என்று எழுந்து நின்று நான் அவருக்கு திரும்ப, திரும்ப சொன்னேன். அவர் வாபஸ் வாங்க மறுத்து பேசிக்கொண்டு போனார். அப்போதுதான் அந்த “சம்பவம்” நிகழ்ந்தது.

மனோ கணேசன் குவளையில் இருந்த தண்ணீரை அதாவுல்லா முகத்தை நோக்கி வீசியது நிதானம் தவறிய தவறு என சிலர் இப்போது கூறப்பார்க்கின்றார்கள்.

முதலில் ஒன்றை கூறுகின்றேன். நான் நிதானம் தவறவில்லை. நினைவுபூர்வமாகவே நான் குடித்து எஞ்சி இருந்த தண்ணீரை அவர் முகத்தில் வீசினேன். நிதானம் தவறி இருந்தால், நாற்காலியை அல்லவா தூக்கி வீசி இருப்பேன்?

மேலும் இப்படி முட்டாள் கருத்தாளர்களின் முகங்களை நோக்கி தண்ணீரை வீசி எறிவது உலகம் முழுக்க நிகழ்ந்துள்ளது. வரலாற்று பக்கங்களை புரட்டி தேடுங்கள். ஏனெனில் சிலருக்கு சில “பாஷைகள்” தான் புரியும் என உலகம் எனக்கு சொல்லி தந்திருக்கின்றது.

இன்னொரு புறம், தமிழ் அகராதியை எடுத்து, அந்த இழிச்சொல்லுக்கு விளக்கம் கூறி, அது “இழிச்சொல்” அல்ல என் நிறுவ முனைவது, அப்புறம் “அவர் மனோவை பாராட்டினார்”, “மலையக மக்களை பற்றி நல்லபடியாதான் பேசினார்”, “அவர் உள்ளத்தில் இருந்து பேசவில்லை”, “தொண்டையில் இருந்தே பேசினார்” என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது எல்லாம் என்னிடம் வீண். என்னிடம் இவற்றை கூறி விளையாட வேண்டாம்.

துஷ்ட கருத்துகளை கூறும் துஷ்டனை கண்டால், நான் தூர விலகி போக மாட்டேன். என் கோபத்தை காட்டுவேன். அது நிதானமான கோபம். இந்த கோபம், எனது நிழலைப்போல் என்னுடன் எப்போதும் வாழ்கிறது.

ஒருவேளை நான் கோபப்படாமல், இந்த சொல்லை கேட்டும், சாந்தமாக பதில் கூறி வந்திருந்தால், யோசித்து பாருங்கள், இன்று உலகம் என் மீது கோபப்பட்டிருக்கும். என் வீடு என் மீது உமிழ்ந்திருக்கும். என் நிழல் என்னை கேவலமாக கணித்திருக்கும்.

ஒன்றை மிகத்தெளிவாக கூறிவைத்திட விரும்புகிறேன். எந்தவொரு இனத்தையும், சமூகத்தையும் விளிக்க, அந்த இனம், சமூகம், ‘இழிச்சொல்” என கருதும், சொல்லை எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது. அதேபோல் மலைநாட்டில் உழைக்கும் பாட்டாளிகள் குறித்து, அந்த இழிசொல்லை இனி எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது.

பயன்படுத்தினால், இந்த மனோ கணேசன் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான இன்றைய மலையக இளையோர் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பொங்கி எழுவார்கள். இது இந்த அதாவுல்லாவுக்கு மட்டுமல்ல, இவரை போன்ற அனைவருக்கும் நான் தரும் செய்தி. நாம் தரும் செய்தி.

Leave a Reply